Published : 17 Sep 2021 03:23 PM
Last Updated : 17 Sep 2021 03:23 PM

எபோலா ஒழிந்தது: கொடிய வைரஸைக் கண்டறிந்த காங்கோ விஞ்ஞானி மகிழ்ச்சித் தகவல்

ஜேக்கஸ் முயும்பே

எபோலா எனும் கொடிய வைரஸ் தோற்றுவிட்டது. தடுப்பூசி அதை தோற்கச் செய்துவிட்டது. இனியும் எபோலாவால் ஏதேனும் பாதிப்பு ஏற்படாமல் நிச்சயமாகத் தடுக்கலாம், மீறி தொற்று வந்தால் நிச்சயமாகக் குணப்படுத்தலாம் என்று கூறியிருக்கிறார் காங்கோ நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி பேராசிரியர் ஜேக்கஸ் முயும்பே. இவர் தான் 40 ஆண்டுகளுக்கு முன்னதாக முதன் முதலில் எபோலா வைரஸைக் கண்டறிந்தவர்.

காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டின் தலைநகரான கின்ஷாவில் கடந்த நிகழ்ச்சி ஒன்று பேராசிரிய ஜேக்கஸ் முயும்பே உரையாற்றினார். அப்போது தான் அவர் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

அவர் பேசியதாவது:

40 ஆண்டுகளாக நான் எபோலா என்ற உயிர்க்கொல்லி வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இருக்கிறேன். இன்று என்னால், ஒரு விஷயத்தை ஆணித்தரமாகக் கூறமுடியும். எப்போலா வைரஸ் தோற்றுவிட்டது. எபோலாவைக் கட்டுப்படுத்தலாம். பாதிப்பு ஏற்பட்டால் நிச்சயமாகக் குணப்படுத்தலாம். காங்கோ மக்களிலேயே இன்று நான் தான் மகிழ்ச்சியானவன் என்று கூறுவேன்.

இவ்வாறு அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

எபாங்கா ஆன்ட்டிபாடி:

ஜேக்கஸ் முயும்பேவும், அமெரிக்காவைச் சேர்ந்த உயிரி ஆராய்ச்சியாளர் நேன்சி சல்லிவனும் சேர்ந்து எபாங்கா (Ebanga) என்ற ஆன்ட்டிபாடி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். மனித உடலில் உள்ள இந்த ஆன்ட்டிபாடி எபோலா உடலுக்குச் செல்வதைத் தடுக்கிறது. ஒருவேளை வைரஸ் மனித உடலில் நுழைந்துவிட்டாலும் கூட உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்துகிறது.

ஆன்ட்டிபாடி (Antibody) பிறபொருளெதிரி என்பது மனிதர்கள் உட்பட முதுகெலும்பிகளில் உடலினுள் ஏற்படுத்தும் பாக்டீரியா அல்லது வைரஸ் நோயை உருவாக்கும் வெளிப் பொருட்களை அடையாளம்கண்டு, அவற்றை அழிக்கவோ அல்லது செயலற்றதாகவோ ஆக்கும் ஒரு வகைப் புரதம் ஆகும். இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எபாங்கா என்ற ஆன்ட்டிபாடி எபோலா ஒழிப்பில் மைல்கல்லாக அமைந்துள்ளது.

எபோலா கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

1976ல் எபோலா எனும் நதிக்கரையில் உள்ள யம்புக்கு எனும் குக்கிராமத்தில் ஜேக்கஸ் தொற்றுநோய் ஆராய்ச்சியாளராக இருந்தார். அப்போது ஒரு கன்னியாஸ்திரிக்கு வினோதமான நோய் ஏற்பட்டிருப்பதாக ஜேக்கஸ் அழைக்கப்பட்டார். அவரது உடலில் இருந்து ரத்த மாதிரிகளை ஜேக்கஸ் சேகரித்தார். அந்த ரத்தத்தைப் பரிசோதிதபோது எபோலா வைரஸ் என்பது உறுதியானது. எபோலா நதிக்கரையோர கிராமத்தில் கண்டறியப்பட்டதால் அந்த வைரஸுக்கு அப்பெயர் வழங்கப்பட்டது.

1976க்குப் பின்னர் எபோலாவால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், 1995ல் கிக்விட் எனும் பகுதியில் எபோலா மீண்டும் தலைதூக்கியது. அப்போது எபோலா பாதித்தும் குணமடைந்த சிலரின் ரத்தத்தை நோய் பாதித்த ஒரே ரத்த வகையறா கொண்டவர்களுக்கு ஏற்றி சிகிச்சையளிக்கும் முயற்சியை ஜேக்கஸ் மேற்கொண்டார். அவரது முயற்சிக்குப் பலன் கிடைத்தது. அதன் அடிப்படையில் தான் 2018ல் எபாங்கா ஆன்ட்டிபாடி ஆராய்ச்சியை ஜேக்கஸ் தொடங்கினார்.

இப்போதைய சூழலில் எபோலா தொற்று ஏற்பட்டால், அந்தப் பகுதியை உடனடியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து அங்குள்ள மக்களுக்கு எபோலா பரிசோதனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையும் மற்றவர்களுக்கு தடுப்பூசியும் செலுத்தினால் நோயை ஒரே வாரத்தில் கட்டுப்படுத்தி விடலாம் என ஜேக்கஸ் முயும்பே கூறினார்.

எபோலா வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து இதுவரை 15000 பேர் இந்நோய்க்கு உயிரிழந்துள்ளனர். எபோலா பாதித்தால் காய்ச்சல், வாந்தி, ரத்தப்போக்கு, வயிற்றோட்டம் ஏற்படும். 2013 முதல் 2016 வரை எபோலா மேற்கு ஆப்பிரிக்காவைக் கடுமையாக அச்சுறுத்தியது. சுமார் 11,000 பேர் இந்தக் காலகட்டத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x