

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 8 மாதங்களில் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. வெளியிட்ட செய்தியில், “கடந்த 8 மாதங்களில் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஆப்கனில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். பெரும்பாலான மக்கள் ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்தும் ஆப்கன் திரும்பியுள்ளனர். இதில் ஆப்கன் எல்லையோரங்களில் வசிக்கும் மக்கள் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் நலத்துறை அமைச்சகத்தில் பெண் ஊழியர்களுக்கு அனுமதி மறுப்பு
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “மகளிர் நலத்துறை அமைச்சகத்துக்குள் நுழைவதற்குப் பெண் ஊழியர்களுக்குத் தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இதன் காரணமாக அலுவலகத்துக்கு நுழையவிடாமல் நான்கு ஊழியர்களைத் தலிபான்கள் தடுத்தனர். ஆண் ஊழியர்களை மட்டுமே தலிபான்கள் அனுமதித்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்கள் ஆட்சியில் சம உரிமை வேண்டி ஆப்கனில் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு போராட்டங்களில் ஈடுபடும் பெண்கள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர்களுக்கு எதிராகத் தலிபான்கள் தொடர்ந்து வன்முறைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
பின்னணி
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனர்.
ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. ஹசன் அகுந்த் பிரதமராகவும், முல்லா கனி துணைப் பிரதமராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.