

ஆப்கனில் மனிதாபிமான உதவிகளைத் தாராளமாகச் செய்யலாம் என ஆப்கனுக்கான ஐ.நா. தூதரிடம் தலிபான் உள்துறை அமைச்சர் இசைவு தெரிவித்தார்.
தலிபான் உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானியுடன் ஆப்கனுக்கான ஐ.நா. தூதர் டெபோரா லயன்ஸ் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார்.
சிராஜுதீன் ஹக்கானி ஐ.நா.வின் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்தவர். அவரை உள்துறை அமைச்சராக தலிபான்கள் அறிவித்தனர். இதனால் தூதரக ரீதியான உறவுகளில் சிக்கல் ஏற்படும் எனக் கருதப்பட்டது.
இந்நிலையில் தான் ஹக்கானியை ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா தூதர டெபோரா லயன்ஸ் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது ஐ.நா குழுவினர் ஆப்கனில் எவ்வித தங்கு தடையுமின்றி அனைத்துவிதமான முக்கியமான உதவிகளையும் செய்யலாம் என்று கூறியுள்ளார்.
இதனை தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "இஸ்லாமிபி எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஹக்கானியும், ஐ.நா. தூதர் டெபோரா லயன்ஸும் நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது ஆப்கானிஸ்தானில் நிலவரம் குறித்தும் மனிதாபிமான உதவிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது உள்துறை அமைச்சர் ஐ.நா தடையின்றி உதவிகளைச் செய்யலாம் என்று கூறியுள்ளார்" எனப் பதிவிட்டுள்ளார்.
2022 பாதிக்குள் ஆப்கானிஸ்தானில் 97% மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே செல்லும் அபாயம் இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது.
அண்மையில், ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் ஆப்கன் நிலவரம் குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். அதில், ஆப்கனுக்காக 600 மில்லியன் டாலர் அளவில் நிதி திரட்டும் முயற்சியை முன்னெடுப்பதாக அறிவித்தார். அதில் மூன்றில் ஒரு பங்கு உணவுக்கானது என்றும் கூறினார்.
இதற்கிடையில் கடந்த வாரம் அட்லான்டிக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஆப்கன் மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜ்மல் அஹமதி, சர்வதேச நாடுகள் ஆப்கன் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்காவிட்டால் அங்கு ஜிடிபி விரைவில் 20% சரியும் சூழல் உருவாகும் என்று எச்சரித்துள்ளார்.
இந்தச் சூழலில் கத்தார், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகள் ஆப்கனுக்கு உதவிகளை அளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.