

டைம் இதழ் நடத்திய 2021ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 100 நபர்கள் குறித்த பட்டியலி்ல் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவர் முல்லா பராதரும் இடம் பெற்றுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையில் அமைய உள்ள இடைக்கால அரசில் துணைப்பிரதமராகவும் முல்லா பராதர் பொறுப்பேற்க உள்ளார்.
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தையிலும் தலிபான் தலைவர் முல்லா பராதர் ஈடுபட்டிருந்தார். தலிபான்களில் மிகவும் அமைதியானவர், ரகசியமானவர், வெளியுலகிற்கு அதிகமாக வராதவர் என்று பெயரெடுத்தவர் முல்லா பராதர். தலிபான்களின் சமீபத்திய மாற்றத்துக்கும் முல்லா பராதரும் காரணமாகும்.
தோஹாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் ஆப்கனுக்கான மறுசீரமைப்புக் குழுவின் சிறப்புப் பிரதிநிதி ஜல்மே கலிலாஜ்துடன் அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவரும் முல்லா பராதர்தான்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபின், அங்கு பேச்சுவார்த்தை நடத்தியதும் பராதர்தான். அதுமட்டுமல்லாமல் முக்கிய முடிவுகளான முந்தைய அரசில் இடம் பெற்றிருந்த நிர்வாகிகளுக்கு மன்னிப்பு அளிப்பது, காபூலை ரத்தக்களறியாக்காமல் கைப்பற்றியது, அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனாவுடன் தொடர்பு ஏற்படுத்தும் முடிவு அனைத்தும் முல்லா பராதர் தலைமையில் எடுக்கப்பட்டதாகும் என டைம் இதழ் தெரிவித்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டில் முல்லா பராதரை பாகிஸ்தானில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அதன்பின் 2018ம் ஆண்டு முல்லா பராதர் விடுவிக்கப்பட்டார். தலிபான் அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரான முல்லா பராதர் அமெரிக்காவுடன் நடத்திய அமைதிப் பேச்சில் முக்கிய பங்கு வகித்தார் ஆனால், அவருக்கு தற்போதைய அரசியல் துணைப் பிரதமர் பதவிதான் வழங்கப்பட்டுள்ளது.