சீனாவில் பள்ளி மாணவர்களிடையே பரவும் கரோனா

சீனாவில் பள்ளி மாணவர்களிடையே பரவும் கரோனா

Published on

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் பரவி கடந்த 2 ஆண்டுகளாக அடுத்தடுத்து கரோனா அலைகள் உருவாகி கொண்டிருக்கின்றன.

சீனா முழுவதும் கரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அந்த நாட்டு அரசு கூறி வந்தது. எனினும் கடந்தஆகஸ்ட் மாதம் ஜியாங்கு, செச்சுவான், லியானிங், ஹுனான், ஹுபெய் உட்பட 18 மாகாணங்களில் கரோனா வைரஸ் பரவியது. அப்போது பல்வேறு நகரங்களில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டு வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.

தற்போது சீனாவின் தென்கிழக்கு மாகாணமான புஜியனின் பல்வேறு நகரங்களில் கரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புஜியன் மாகாணத்தின் புட்டியன்நகரில் சுமார் 32 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அந்த நகரை சேர்ந்த ஒருவர் அண்மையில் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டு திரும்பினார். கரோனா பரிசோதனை, 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

ஊரடங்கு அமல்

வீட்டுக்கு சென்ற பிறகு அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. அவரது 12 வயது மகன் அருகில் உள்ள பள்ளியில் படிக்கிறார். அந்த மாணவர் மூலம் 36 மாணவ, மாணவியருக்கு தொற்று பரவியது. இதைத் தொடர்ந்து புட்டியன் நகரில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு, ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல புஜியன் மாகாணத்தில் மின்னணு பொருட்கள் உற்பத்தி மையமான ஜியாமென் நகரில் நேற்று சுமார் 56 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அந்த நகரில் 45 லட்சம் மக்கள் வசிக்கும் நிலையில் அங்கும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டிருக்கிறது.

சீனாவின் தேசிய சுகாதார ஆணைய குழு, புஜியன் மாகாணத்தில் முகாமிட்டு வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in