

பல மில்லியன் டாலர் அளவுக்கு நிதியை விடுவிக்க முன்வந்துள்ள உலக நாடுகளுக்கு தலிபான்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் மிக மோசமான அளவில் மனிதநேய நெருக்கடி ஏற்பட்டுள்ளதல உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்யுமாறு ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்ரேஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அண்மையில், ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் ஆப்கன் நிலவரம் குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். அதில், ஆப்கனுக்காக 600 மில்லியன் டாலர் அளவில் நிதி திரட்டும் முயற்சியை முன்னெடுப்பதாக அறிவித்தார். அதில் மூன்றில் ஒரு பங்கு உணவுக்கானது என்றும் கூறினார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான், கத்தார், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இதற்காக அந்நாடுகளுக்கு தலிபான்களின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாகி நன்றி தெரிவித்துள்ளார்.
உதவியாகக் கிடைத்துள்ள நிதியை சரியாக மேலாண்மை செய்து வறுமை ஒழிப்புக்காகப் பயன்படுத்துவோம் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
இஸ்லாமிக் எமிரேட் தேசம், இந்த உதவியை ஏழை, எளிய மக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் கொண்டு சேர்க்கும் என்று கூறினார்.
அதேவேளையில், ஆப்கானிஸ்தானில் இருந்து 1,20,000 பேரை பத்திரமாக வெளியேற்ற உதவிய தலிபான்களுக்கு அமெரிக்க உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றார். அமெரிக்கா பெரிய நாடு. அதனால் பெரிய மனதுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானுக்கு 15 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக சீனா அறிவித்திருந்தது. ஆனால், சீன நிதி குறித்து தலிபான்கள் இன்னும் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.