Published : 14 Sep 2021 05:37 PM
Last Updated : 14 Sep 2021 05:37 PM

நெருங்கிய வட்டத்தில் சிலருக்கு கரோனா: தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட ரஷ்ய அதிபர்

நெருங்கிய வட்டத்தில் இருந்த சில நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இது குறித்து ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ரஷ்ய அதிபர் புதினுக்கு நெருங்கிய வட்டத்தில் இருந்த நபருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் புதின் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதிபர் புதின் ஸ்புட்னிக் V தடுப்பூசி இரண்டு டோஸும் செலுத்திக் கொண்டுள்ளார். இருப்பினும் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதிபர் புதின் பூரண ஆரோக்கியத்துடனேயே உள்ளார். அவர் தனது வழக்கமான அலுவல்களை மேற்கொள்வார். ஆனால் தனிமைப்படுத்துதலில் அவர் தனது அலுவல்களை மேற்கொள்வார். அதிபருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு தொற்று இல்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக திங்கள்கிழமையன்று புதின் ரஷ்யா பாராலிம்பிக் வீரர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பெலாரஸ் நாட்டுடன் இணைந்து நடத்தப்பட்ட ராணுவ அணிவகுப்பில் பங்கேற்றார். சிரிய அதிபர் பஷார் அசாதை சந்தித்தார். பாராலிம்பிக் வீரர்களை சந்தித்தபோதே தான் விரைவில் தனிமைப்படுத்திக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதனைக் குறிப்பிட்டு, அதிபர் புதினுக்கு தன்னைச் சுற்றி நிறைய பேர் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிந்திருந்தும் ஏன் அவர் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

இது குறித்து க்ரெம்ளின் செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ், மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்னர் தான் அதிபர் தனிமைப்படுத்துதல் முடிவை எடுத்தார். ஆகையால் அதிபரால் யாருடைய உடல்நலத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படவில்லை என்று கூறினார்.
ரஷ்யாவில் அன்றாடம் 17000 முதல் 18000 வரை கரோனா தொற்று பதிவாகிறது. இறப்பு எண்ணிக்கை 800 என்றளவில் இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x