

கரோனாவைக் கட்டுப்படுத்த, தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை பாகிஸ்தான் அரசு விதித்து வருகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் திட்டக் குழு அமைச்சர் அசாத் உமர் கூறும்போது, “ செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் அலுவலகங்களுக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்படும். மேலும் மால்கள், பொதுப் போக்குவரத்தையும் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும். இஸ்லாமாபாத்தைப் போல நாட்டின் பிற நகர மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, பாகிஸ்தானில் 15 வயது முதல் 18 வயதுடையோருக்குத் தடுப்பூசி தயாராக இருப்பதாகவும், மக்கள் இதைப் பயன்படுத்தி தங்களின் குழந்தைகளை கரோனா தொற்றிலிருந்து காப்பாற்றுமாறும் அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் இதுவரை 12 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.
டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், வியட்நாம், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 19 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதுவரை உலகம் முழுவதும் 5.66 பில்லியன் மக்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.