

ஆப்கனில் பல முக்கிய இடங்களில் பெண்கள் தங்கள் உரிமைகளைக் கோரி போராட்டம் நடத்திவரும் சூழலில் தலிபான்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் மாசர் ஐ ஷாரிப் நகரத்தில் தங்களுக்கான உரிமைகள் வேண்டி பெண்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த தலிபான்கள் அவர்களைச் சாட்டையால் தாக்கினர். இதில் வலி தாங்க முடியாமல் பெண்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காபூல் பல்கலைக்கழகத்தில் நடந்த தலிபான்கள் ஆதரவுக் கூட்டத்தில் பெண்களைக் கட்டாயப்படுத்தி, தலிபான்கள் கலந்துகொள்ள வைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு தலிபான்கள் கருத்து தெரிவிக்கவில்லை.
பின்னணி
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனர்.
ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. ஹசன் அகுந்த் பிரதமராகவும், முல்லா கனி பரதார் துணைப் பிரதமராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் உள்துறை அமைச்சரான சிராஜுதீன் ஹக்கானி ஐ.நா.வால் தேடப்படும் பயங்கரவாதிகளின் பட்டியலில் இருக்கிறார்.