

மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக டான் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த மாதம் 31 மற்றும் ஏப்ரல் 1 தேதிகளில் அமெரிகாவில் அணுசக்தி உச்சி மாநாடு நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா தலைமையில் நடைபெறும், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் இதற்காக அமெரிக்கா செல்கிறார்.
இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டான் நாளிதழுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறும் உச்சிமாநாட்டின்போது இந்தியப் பிரதமரும், பாகிஸ்தான் பிரதமரும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு மிகமிக அதிகமாக இருக்கிறது.
ஆனாலும், இந்தியா - பாகிஸ்தான் உறவுகளின் வரலாற்றுப் பக்கத்தை திருப்பிப் பார்க்கும்போது எதுவுமே நடந்தால் மட்டுமே நிச்சயம் என்பதை உணர்த்துவதாகவே உள்ளது. இருந்தாலும் மோடி - நவாஸ் சந்திப்புக்கான வாய்ப்பு அதிகமே" என்றார்.
கடைசியாக லாகூருக்கு மோடி திடீர் பயணம் மேற்கொண்டபோது நவாஸ் - மோடி சந்திப்பு நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.