

பஞ்ச்ஷீர் மாகாணத்தில் உள்ள தலிபான் எதிர்ப்புக் குழுவினர் தொடர்பான விவகாரத்தில் தலிபான்களுக்குள் கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் இதில் துணைப் பிரதமர் முல்லா பரதார் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்ததாகவும் பரபரப்புத் தகவல் வெளியானது.
ஆனால் இந்தத் தகவலை துணைப் பிரதமர் முல்லா அப்துல் கனி பரதார் தாமே குரல் அறிக்கை மூலம் மறுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் அவர்களின் ஆட்சியை எதிர்த்து பஞ்ச்ஷீர் பகுதியிலிருந்து குரல் எழும்பியது. பஞ்ச்ஷீர் பகுதி போராளிகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 1990களில் தலிபான்கள் ஆதிக்க சக்தியாக இருந்தபோது பஞ்ச்ஷீரை அவர்களால் நெருங்க இயலவில்லை. சோவியத் படைகள் கூட அப்பகுதியை நெருங்க முடியாத அரணாக தலிபான் எதிர்ப்புக் குழுவின் தலைவர் அகமது ஷா மசூத் வைத்திருந்தார்.
இந்நிலையில், தலிபான்களை பஞ்ச்ஷீர் போராளிகள் எதிர்த்தாலும் பஞ்ச்ஷீரின் 70% பகுதிகளைக் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் கூறுகின்றனர்.
ஆனால், பஞ்ச்ஷீர் விவகாரத்தில் தலிபான் தலைவர்களுக்குள்ளேயே உட்பூசல் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அனஸ் ஹக்கானி தரப்பினருக்கும் பரதார் தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. மேலும் இந்த சண்டையில் முல்லா அப்துல் கனி பரதார் சுடப்பட்டார். அவர் காயங்களுடன் பாகிஸ்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று பரபரப்புத் தகவல் வெளியானது.
இந்நிலையில் இது குறித்து டோலோ நியூஸ் செய்தி நிறுவனத்துக்கு ஆடியோ குறுந்தகவல் ஒன்றை பரதார் அனுப்பியுள்ளார். அதில் நான் நலமுடன் இருக்கிறேன். துப்பாக்கிச் சூடும் நடைபெறவில்லை. அதில் நான் காயமும் அடையவில்லை என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த வாரம் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகிதீன் பேசும்போது பஞ்ஷீரை முழுமையாக தலிபான் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆப்கானிஸ்தான் முழுமையாக சுதந்திர நாடாகிவிட்டது என்று கூறியிருந்தார்.
இதற்கிடையில், தலிபான் எதிர்ப்புக் குழுவின் தலைவர் அகமது மசூத் எங்கு இருக்கிறார் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.