தடுப்பூசி ஏற்றத்தாழ்வு நீங்க வேண்டும்: பீட்டில்ஸ் இசைக்குழு பாடகர் ஜான் லெனானின் 'இமேஜின்' பாடலைப் பகிர்ந்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் உருக்கம்

தடுப்பூசி ஏற்றத்தாழ்வு நீங்க வேண்டும்: பீட்டில்ஸ் இசைக்குழு பாடகர் ஜான் லெனானின் 'இமேஜின்' பாடலைப் பகிர்ந்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் உருக்கம்
Updated on
2 min read

உலகளவில் கரோனா தடுப்பூசி விநியோகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு குறித்து தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் கவலை தெரிவித்து வருகிறார். வளர்ந்த நாடுகளை எச்சரித்தும் வருகிறார்.

அந்த வரிசையில் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓர் உருக்கமான ட்வீட்டைப் பதிவு செய்துள்ளார். #VaccinEquity என்ற ஹேஷ்டேகைப் பயன்படுத்தி அவர் அந்த ட்வீட்டைப் பகிர்ந்துள்ளார்.

அந்த ட்வீட்டில், 50 ஆண்டுகளுக்கு முன்னால் ஜான் லெனான் பாடிய இமேஜின் பாடல் இப்போதைய காலகட்டத்துக்கு மிகப் பொருத்தமாக உள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் உலகில் உள்ள அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் கரோனாவுக்கு எதிரான அனைத்து உபகரணங்களையும் பகிர்ந்து கொள்ளும் சூழல் உருவானால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்களேன். நான் கனவு காண்கிறேன் என்று கூறி நீங்கள் கடந்து செல்லலாம். ஆனால், இந்தக் கனவை நான் ஒருவன் மட்டுமே காணவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

இதுவரை உலகளவில் 5.5 பில்லியனுக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 80% தடுப்பூசிகள் வளர்ந்த நாடுகளால் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதனைக் குறிப்பிட்டு அண்மையில் ஜெனீவாவில் நடந்த கூட்டத்தில் பேசியிருந்த டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ், "சில தினங்களுக்கு முன்னர் மருந்து நிறுவனங்கள் தடுப்பூசிகள் இருப்பு பூஸ்டர் டோஸை எதிர்கொள்ளவே போதுமானதாக இருக்கிறது என்று கூறின. அந்த மருந்து நிறுவனங்களின் அலட்சியம் என்னை கோபப்படுத்தியுள்ளது. கரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏழை நாடுகள் வளர்ந்த நாடுகளிடம் அபிரிமிதமாக இருக்கும் மிச்சங்களைக் கொண்டு தங்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற மனப்பாண்மையில் சில வளர்ந்த நாடுகளும் மருந்து நிறுவனங்களும் செயல்படுகின்றன. இது ஏற்புடையது அல்ல. அப்படிப்பட்டவர்கள் நடத்தையைப் பொறுத்துக் கொண்டு அமைதி காக்க மாட்டேன்.

ஏழை, வளரும் நாடுகளின் சுகாதாரப் பணியாளர்களும், மூத்த குடிமக்களும் மற்ற நாட்டவரைப் போலவே தடுப்பூசியை சமவாய்ப்புடன் பெறத் தகுதியானவர்களே. ஏற்கெனவே நான் கடந்த மாதம் வளர்ந்த நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதை சற்றே நிறுத்தி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். தற்போது மீண்டும் அதையே வலியுறுத்துகிறேன்.

இந்த ஆண்டு இறுதி வரையிலாவது வளர்ந்த நாடுகள் மூன்றாம் டோஸ் தடுப்பூசியை நிறுத்திவைக்கலாம். இதன்மூலம், உலகளவில் அனைத்து நாடுகளுமே குறைந்தபட்சம் தங்கள் மக்களில் 40% பேருக்காவது தடுப்பூசி செலுத்த முடியும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் ஜான் லெனானின் இமெஜின் பாடலைப் பகிர்ந்து நெகிழ்ச்சி பொங்க ஒரு ட்வீட்டைப் பகிர்ந்துள்ளார்.

யார் இந்த ஜான் லெனான்?

1940களில் உலகையே கலக்கிய பிரபல இன்னிசைக் குழு பீட்டில்ஸ். இந்தக் குழுவின் தலைவராக இருந்து வழிநடத்தினார் பாடகரும், கிட்டரிஸ்டும், கவிஞருமான ஜான் லெனான். இவர் சர்வதேச அமைதி செயற்பாட்டாளராகவும் இருந்தார். இவர் எழுதிப் பாடிய இமேஜின் என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப் பாடல் உலக அமைதியை வலியுறுத்திப் பாடப்பட்டது.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடைமை சிந்தனையும் இந்தப் பாடலில் உண்டு. இந்நிலையில் இந்தப் பாடலை தற்போதைய கரோனா தடுப்பூசி ஏற்றத்தாழ்வு நிலை மாற வேண்டி பகிர்ந்துள்ளார் உலக சுகாதார அமைப்பின் தலைவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in