கரோனா எப்போது முடியும்? - நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்?

கரோனா எப்போது முடியும்? - நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்?
Updated on
2 min read

உலகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலை, மூன்றாம் அலை எனத் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் கரோனா எப்போது முடிவுக்கு வரும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து உலகின் பல முக்கிய மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மினசோட்டா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் கொள்கை மையத்தின் இயக்குநர் மைக்கேல் கூறும்போது, ''உலகம் முழுவதும் கரோனா குறைந்தும், எழுச்சியும் அடைந்து வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

உலகில் இன்னமும் கோடிக்கணக்கான மக்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. இதன் காரணமாகப் பள்ளிகள், பொதுப் போக்குவரத்து, அலுவலகங்களில் கரோனா பரவுகிறது. நாம் மலைகளையும், பள்ளத்தாக்குகளையும் பார்க்க விரும்புகிறோம் அல்லவா?. அதற்கு தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். அடுத்த ஆறு மாதங்களுக்கு கரோனா நீடிக்கும்'' என்றார்.

கோவிட் எப்போது முடியும்?

கரோனா முடிவதற்குள் உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் அல்லது கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பார்கள் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது உலக மக்கள் தொகையில் 90% முதல் 95% வரை பெரும்பாலான மக்கள் தடுப்பூசி அல்லது முந்தைய நோய்த்தொற்றின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றவுடன் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்படும் என்று நிபுணர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

இதில் துரதிர்ஷ்டவசமாக சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறையும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பயன்தரும் தடுப்பூசி

கரோனா தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்டவர்கள் கரோனாவால் இறப்பதற்கு 11 மடங்கு வாய்ப்பு குறைவு என்றும், தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடுகையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 10 மடங்கு வாய்ப்பு குறைவு என்றும் அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனா பரவலை உலக நாடுகள் கையாளும் விதம்

சிங்கப்பூர், டென்மார்க், மலேசியா போன்ற நாடுகள் கரோனா பரவலை உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் கட்டுப்படுத்தி வருகின்றன.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் கரோனா எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டாலும் அவை கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை. மாறாக கரோனா தடுப்பூசியை அதிகம் செலுத்தி வருகின்றன.

சீனா, ஹாங்காங், நியூசிலாந்து ஆகிய நாடுகள் கரோனா அதிகம் பரவும் இடங்களில் மட்டும் கட்டுப்பாடுகளை விதித்துப் பரவலைக் கட்டுப்படுத்துகின்றன.

டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 19 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதுவரை உலகம் முழுவதும் 5.66 பில்லியன் மக்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in