Published : 13 Sep 2021 04:17 PM
Last Updated : 13 Sep 2021 04:17 PM

பேசும் படம்: மலேசியாவில் ஒராங்குட்டான் குரங்குகளுக்கு நடந்த கோவிட் பரிசோதனை

மலேசியாவின் போர்னியோ தீவுகள் ஒராங்குட்டான் வகையறா குரங்குகளுக்குப் பெயர் பெற்றது. இங்குள்ள ஒரு வன உயிரியால் பூங்கா ஊழியருக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து போர்னியோ தீவுகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட ஒராங்குட்டான் குரங்குகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முதற்கட்டமாக 30 ஒராங்குட்டான் குரங்குகளுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று இந்தப் பரிசோதனை செய்யப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. முழு கவச உடை அணிந்த கால்நடை மருத்துவர்கள் மனிதர்களுக்கு எடுப்பது போலவே மூக்கில் இருந்து சளி மாதிரியை சேகரித்துப் பரிசோதனை செய்தனர்.

ஆனால், எந்த ஒரு குரங்குக்கும் தொற்று உறுதியாகவில்லை. குரங்குகளுக்கு மூக்கிலிருந்து மாதிரியை சேகரிப்பதற்குள் கால்நடை மருத்துவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

கடந்த வாரம் அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் ஒரு பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த பல்வேறு கொரில்லாக்களுக்கு கரோனா உறுதியானது. உலகம் முழுவதும் வளர்ப்புப் பிராணிகள் தொடங்கி வன உயிரியல் பூங்கா விலங்குகள் வரை அவ்வப்போது விலங்குகளுக்கு கரோனா உறுதியாகி வருகிறது. கரோனா வைரஸே வவ்வாலிடம் இருந்துதான் மனிதர்களுக்குப் பரவியிருக்கும் அஞ்சப்படும் சூழலில் அவை மீண்டும் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்குப் பரவினால் விலங்குகள் மத்தியில் அது அதிக வீரியம் கொண்ட வைரஸாக உருமாற்றம் அடையக் கூடும் என்ற எச்சரிக்கை நிலவுகிறது. ஆனால், இதுவரை கரோனா பாதித்த விலங்குகள் பெரும்பாலானவை குணமாகிவிடுகின்றன.

இப்போது ஒராங்குட்டான் குரங்களுக்கு மேற்கொண்ட பரிசோதனை நெகடிவ் என வந்திருப்பது ஆறுதல் அளிப்பதாக விலங்கின ஆர்வலர்கள் தெரிவித்துள்ளன. ஒராங்குட்டான் குரங்குகள் உடல் செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். மற்ற மனிதக் குரங்குகளுடன் ஒப்பிடுகையில் நீண்ட கைகளைக் கொண்டிருக்கும். இவை கிப்பன்களைப் போல நேராக நிமிர்ந்து நடப்பவை. இவற்றின் உடல்சார்ந்த தோற்றம், நடத்தை சார்ந்த செயற்பாடுகள், மற்றும் தொல்லுயிர் எச்ச ஆய்வுகள் மூலமாக, இவை மனிதருக்கு மிக நெருக்கமாக இருப்பதைக் காட்டுகின்றன. அழிந்து வரும் இந்தவகை குரங்கினம் மலேசியாவில் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் உள்ளது.

அதனாலேயே அவற்றிற்கு கரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x