Published : 13 Sep 2021 03:04 PM
Last Updated : 13 Sep 2021 03:04 PM

ஆப்கனில் பணமின்றி பரிதவிக்கும் மக்கள்; 2022க்குள் 97% மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் செல்வார்கள் என எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துவிட்டாலும் கூட அங்கு இன்னும் பொருளாதாரம் மீளவில்லை. இதனால் அங்கு மக்கள் பணமின்றி தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் விவசாய உற்பத்தி சார்ந்தது. கடந்த ஆண்டு அங்கு கடுமையான வறட்சி ஏற்பட்டது. ஏற்கெனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் கரோன பெருந்தொற்றால் இன்னும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேற தலிபான்களின் பிடி இறுகியது. தலிபான்களின் ஆட்சி அமைந்துவிட்டாலும் கூட அங்கு பொருளாதாரத்தை சீர் செய்வதற்கான வாய்ப்புகள் தெரியவில்லை.

தேசத்தை மீள் கட்டமைக்க பெரும்பாலும் சீன மற்றும் ரஷ்ய நிதியையே எதிர்நோக்கி இருப்பதாக தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகிதீன் தெரிவித்திருந்தார். ஆனால், தலிபான்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் இன்னும் நிதி உதவிகள் சீனா, ரஷ்யாவிடமிருந்து வரவில்லை.

இந்நிலையில், 2022 பாதிக்குள் ஆப்கானிஸ்தானில் 97% மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே செல்லும் அபாயம் இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

அண்மையில், ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் ஆப்கன் நிலவரம் குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். அதில், ஆப்கனுக்காக 600 மில்லியன் டாலர் அளவில் நிதி திரட்டும் முயற்சியை முன்னெடுப்பதாக அறிவித்தார். அதில் மூன்றில் ஒரு பங்கு உணவுக்கானது என்றும் கூறினார்.

இதற்கிடையில் கடந்த வாரம் அட்லான்டிக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஆப்கன் மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜ்மல் அஹமதி, சர்வதேச நாடுகள் ஆப்கன் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்காவிட்டால் அங்கு ஜிடிபி விரைவில் 20% சரியும் சூழல் உருவாகும் என்று எச்சரித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள பெரும்பாலான ஏடிஎம் இயந்திரங்களில் பண வரவில்லை. ஆனால், ஒரு நாளைக்கு 20000 ஆப்கனி வரை எடுத்துக் கொள்ளலாம் என வங்கிகள் அறிவித்துள்ளன. எந்த ஏடிஎம் இயந்திரத்திலாவது பணம் நிரப்பப்படாதா என்று மக்கள் காத்திருக்கின்றன.

டோட்டல் பிரேக்டவுன் நிலையை நோக்கி ஆப்கானிஸ்தான்:

ஒரு தேசத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி எப்போது 10 சதவீதத்துக்கும் மேல் ஜிடிபி வெளிநாட்டிலிருந்து வருகிறதோ அப்போது அந்த நாடு வெளிநாட்டு நிதியை நம்பியிருக்கும் நாடு என்ற பட்டியலில் இடம் பெற்றுவிடும் எனக் கூறுகிறது உலக வங்கி. கடந்த 20 ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானில் 40% ஜிடிபி வெளிநாட்டு நிதியையே நம்பியுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிர பணத் தட்டுப்பாடு அந்நாட்டை டோட்டல் பிரேக்டவுன் எனப்படும் ஒட்டுமொத்த பொருளாதாரப் பேரழிவை நோக்கி இட்டுச் செல்வதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இத்தகைய சூழலில் தான் ஆப்கானிஸ்தான் மக்கள் கையில் பணமின்றி தவித்து வருகின்றனர். பணத்துக்காக எல்லா பொருட்களையும் அவர்கள் விற்பனை செய்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இன்னும் அமைச்சரகங்களின் அலுவலகங்கள் மூடியுள்ளன. வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது.
ஆப்கன் வியாபாரி ஒருவர், இங்குள்ள நிலைமையைப் படம் பிடித்து யாராவது முன்னாள் அதிபர் அஷ்ரப் கனிக்கு அனுப்புங்கள். அவர் நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பார் என நான் நம்புகிறேன். இங்கே அவர் கைவிட்டுச் சென்ற தேசம் எப்படி மோசமாக இருக்கிறது என்பதை அவரிடம் தெரிவியுங்கள் என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x