தீவிரவாதத்தை ஒடுக்க போதிய வழிமுறை இல்லை: ஐ.நா. வரைவு செயல்திட்டம் குறித்து இந்தியா கருத்து

தீவிரவாதத்தை ஒடுக்க போதிய வழிமுறை இல்லை: ஐ.நா. வரைவு செயல்திட்டம் குறித்து இந்தியா கருத்து
Updated on
1 min read

வன்முறை தீவிரவாதத்தை ஒடுக்க ஐ.நா. முன்வைத்துள்ள வரைவு செயல்திட்டத்தில் போதிய வழிமுறைகள் இல்லை என்று இந்தியா கூறியுள்ளது.

உலக அளவில் வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான செயல்திட்டத்தை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தயாரித்துள்ளார். இந்த வரைவு திட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் ஐ.நா. பொதுச் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. வன்முறை தீவிரவாதத்தை ஒடுக்க ஒவ்வொரு நாடும் தேசிய செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என இத்திட்டம் பரிந்துரைக்கிறது. இந்த வரைவு திட்டம் நேற்று முன்தினம் ஏற்றுக்கொள்வதாக இருந்தது. ஆனால் பல்வேறு நாடுகளின் மாறுபட்ட கருத்துகள் காரணமாக மேலும் விவாதிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இதன் மீதான விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சையது அக்பருதீன் பேசியதாவது:

நம்மை ஒட்டுமொத்தமாக அச்சுறுத்தும் வன்முறை தீவிரவாதம் என்ற வைரஸை தடுப்பதற்கு தற்போதைய வரைவு திட்டத்தில் போதிய ஏற்பாடுகள் இல்லை என்பதே எங்கள் கருத்து. ஐ.நா. பொதுச் செயலாளர் பரிந்துரைக்கும் செயல்திட்டத்தில் இந்த அச்சுறுத்தலுக்கு தீர்வு ஏதும் இல்லை.

வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதில் ஐ.நா.வின் உதவியை கோரும் உறுப்பு நாடுகளுக்கு உதவிடும் வகையிலான ஒற்றை தொடர்பு முனை இதில் எங்கே உள்ளது?

இத்திட்டத்தை முழுவதும் ஆராய்ந்தபோது, துரதிருஷ்ட வசமாக இந்த அடிப்படை மற்றும் எளிய கேள்விக்கு பதில் இல்லை. இத்திட்டத்தில் அரசுகளுக்கான பரிந்துரைகளே முழுவதும் உள்ளன.

ஆனால் அரசுகளுக்கு உதவிட ஐ.நா. என்ன செய்யும் என்ற கேள்விக்கான விடை இல்லை. வன்முறை தீவிரவாதம் கண்கூடான மற்றும் தொடர் அச்சுறுத்தலாக இருப்பதால் அதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் அவசியம்.

இதனை ஒவ்வொரு நாட்டின் தனிப்பட்ட பிரச்சினையாக கருதக் கூடாது. இது உலகளாவிய பிரச்சினை. இதை எதிர்கொள்வதற்கு சர்வதேச ஒத்துழைப்பை அதிகரிப்பது அவசியம். இதற்கான ஏற்பாடுகள் இத்திட்டத்தில் இல்லை.

இவ்வாறு சையது அக்பருதீன் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in