

இரண்டு நாள் அரசுமுறை பயண மாக நேற்று முன்தினம் இலங்கை சென்றடைந்த மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நேற்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து இலங்கைக்கான இந்திய தூதர் ஒய்.கே.சின்ஹா கூறியதாவது:
இலங்கை அதிபர் சிறிசே னாவை மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித் துப் பேசினார். அப்போது, கலாச்சார ரீதியாக ஆயிரக்கணக்கான ஆண்டு களாக இரு நாடுகளுக்கிடையே நீடித்து வரும் சுமுகமான உறவு குறித்து அதிபர் நினைவுகூர்ந்தார்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது, இலங்கையில் இந்திய அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் நிலவரம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்த திட்டங்களின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதாக இரு வரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். இவற்றுக்கு நிதியுதவி வழங்கி வருவதற்காக இந்தியாவுக்கு சிறிசேனா நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் இதற்கு முன்பு இந்திய உயர்நிலைக் குழுவினர் கொழும்புக்கு வந்திருந்தபோது எடுக்கப்பட்ட முடிவு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சுஷ்மாவுக்கு சிறிசேனா விளக்கம் கொடுத்தார்.
கொழும்பில் நேற்று முன் தினம் நடைபெற்ற இந்திய-இலங்கை 9-வது கூட்டு ஆணை யத்தின் செயல்பாடுகள் குறித்து இருவரும் ஆய்வு செய்தனர். இருதரப்பு உறவு தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்த கூட்டு ஆணையம் 2012-ல் அமைக்கப் பட்டது.
பின்னர் முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டார நாயகே குமார துங்காவை சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு உறவை பலப்படுத் துவது குறித்து ஆலோசனை நடத்தினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இலங்கை எதிர்க்கட்சித் தலை வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் (டிஎன்ஏ) தலைவருமான ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட தலைவர் களையும் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று சந்தித்துப் பேசினார்.
மீனவர் பிரச்சினை
இருதரப்பு உறவுக்கு சவாலாக உள்ள மீனவர் பிரச்சினைக்கு புதுமையான மற்றும் நீண்டகால அடிப்படையில் தீர்வு காண இந்தியாவும் இலங்கையும் ஒப்புக் கொண்டுள்ளன.
நேற்று முன்தினம் கொழும்பு சென்றடைந்த மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்துப் பேசினார். பின்னர் அங்கு நடைபெற்ற இந்திய-இலங்கை கூட்டு ஆணைய கூட்டத்தில் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா பங்கேற்றனர்.
அப்போது மீனவர் பிரச்சினை குறித்து ஆலோசித்தனர். மேலும் பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், மின்சாரம் மற்றும் எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு, சமூக, கலாச்சார மற்றும் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு, விமான போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசித்தனர்.
இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சக இணை செயலாளர் ரேனு பால் கூறும்போது, “இரு நாட்டு அமைச்சர்களும் மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மீனவர் பிரச்சினைக்கு புதுமையான மற்றும் நீண்டகால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது. இதன்படி இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீராவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு இந்தியா சார்பில் கோரப்பட்டது. இதற்கு இலங்கை ஒப்புக்கொண்டது” என்றார்.