

போப் இரண்டாம் ஜான் பால், திருமணமான ஒரு பெண்ணுடன் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு வைத்திருந்ததாகக் கூறி அதற்கான கடித ஆதாரங்களை பிபிசி வெளியிட்டுள்ளது.
பிபிசி நேற்று ஒரு குறும்படத்தை ஒளிபரப்பியது. அதில் இரண்டாம் ஜான் பால் போலந்தில் பிறந்த அமெரிக்க பெண்ணான அன்னா -தெரசா டைமீனீகாவுடன் தீவிர நட்பு வைத்திருந்ததாக சித்தரிக்கப் பட்டுள்ளது. மேலும், ஜான் பால் உணர்வு பூர்வமான வார்த்தைகள் அடங்கிய கடிதங்களை தெரசா வுக்கு எழுதியதாகக் கூறப்பட்டுள் ளது. அவற்றில் சில கடிதங்களும் காண்பிக்கப்பட்டன.
எனினும், ஜான் பால் தனது பிரம்மச்சரியம் தொடர்பான உறுதி மொழியை அவர் மீறியதாக அந்தக் குறும்படத்தில் எவ்வித தகவலும் இடம்பெறவில்லை. விடுமுறை நாட்களில் இவர்கள் இருவரும் சேர்ந்து பனிச்சறுக்கு, நடை பயணம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபட்டதாக அதில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1976-ம் ஆண்டு செப்டம்பரில் எழுதப்பட்ட ஒரு கடிதத்தில், “இறைவனின் பரிசு”, “எனதருமை தெரசா” என தெர சாவை ஜான் பால் வர்ணித்துள்ளார்.
இந்த குறும்படத்தைத் தயாரித்துள்ள பிபிசி மூத்த செய்தியாளர் எட்வர்டு ஸ்டூர்டன் கூறும்போது, “ஜான் பால் தத்துவ அறிஞரும் எழுத்தாளருமான தெரசாவுக்கு எழுதிய 50-க்கும் மேற்பட்ட கடிதங்கள் போலந்தின் தேசிய நூலகத்தில் இருந்தது கண்டிபிடிக்கப்பட்டது. இதில் முதல் கடிதம் 1973-லும் இறுதி கடிதம் 2005-லும் எழுதப்பட்டுள்ளது” என்றார்.
1978-ம் ஆண்டு முதல் போப் ஆக இருந்த இரண்டாம் ஜான் பால், 2005 ஆண்டு இறக்கும் வரை அந்தப் பதவியில் இருந்தார். இறப்பதற்கு முன்னதாகக் கூட தெரசாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதேநேரம் தெரசா இரண்டாம் ஜான் பாலுக்கு எழுதிய கடிதம் எதையும் வெளியிடவில்லை. அவர் கடந்த 2014-ம் ஆண்டு உயிரிழந்தார்.