

கரோனா தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்டவர்கள் கரோனாவால் இறப்பதற்கு 11 மடங்கு வாய்ப்பு குறைவு என்றும், தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடுகையில் 10 மடங்கு குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்றும் அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,71,125 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,761 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடுவதை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.
100 தொழிலாளர்களை உள்ளடக்கிய நிறுவனங்கள், தங்களது தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும், வாரத்திற்கு ஒருமுறை தொழிலாளர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் கரோனா தடுப்பூசிகள் மிகவும் பயனளிப்பதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நோய்த் தடுப்பு மைய இயக்குநர் ரோச்சல்லா வெலன்க்சி கூறும்போது, “ நாம் தொடர்ந்து செய்த ஆராய்ச்சியில் கரோனா தடுப்பூசிகள் சிறப்பாக வேலை செய்வது தெரியவந்துள்ளது. கரோனா தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் கரோனாவால் இறப்பதற்கு 11 மடங்கு வாய்ப்பு குறைவு. தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடுகையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 10 மடங்கு வாய்ப்பு குறைவு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 19 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.