

2001ஆம் ஆண்டு, அமெரிக்காவில் இதே நாளில்தான் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்டன.
இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்து 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மக்கள் வீதிகளில் இந்தத் தாக்குதலின்போது உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசும்போது, “என்னைப் பொறுத்தவரை, செப்டம்பர் 11 முக்கியப் பாடம். ஒற்றுமையே நமது மிகப்பெரிய பலம் என உணரவைத்த தருணம்” என்று தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதல் நடந்தபோது எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை மாக்ஸர் டெக்னாலஜிஸ் (Maxar Technologies) வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நடந்தது என்ன?
செப்டம்பர் 11, 2001. நான்கு அமெரிக்க விமானங்களை அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சார்ந்த 19 பேர் கடத்தினார்கள். இரண்டு விமானங்கள் நியூயார்க் நகரத்தில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டைக் கோபுரங்களின் மீதும், ஒரு விமானம் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவத் தலைமையிடமான பென்டகன் மீதும் மோதின. நான்காவது விமானம் கட்டுப்பாட்டை இழந்து பென்சில்வேனியாவில் உள்ள வெட்டவெளியில் தரையில் மோதி வெடித்துச் சிதறியது.
இந்தத் தாக்குதல்களில் 80க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3,000 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
செப்டம்பர் 11 இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்துக்கு எதிரான போரைத் தொடங்குவதாக அமெரிக்கா அறிவித்தது. இதனைத் தொடர்ந்தே இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஒசாமா பின்லேடனைப் பிடிக்க ஆப்கானில் போரில் ஈடுபட்டது அமெரிக்கா.