Published : 09 Sep 2021 07:19 PM
Last Updated : 09 Sep 2021 07:19 PM

அமெரிக்கர்கள் உட்பட 200 பேர் காபூலில் இருந்து வெளியேறுகின்றனர்: ஆக.31-க்குப் பின்னர் நடைபெறவுள்ள முதல் மீட்புப் பணி

காபூலில் சிக்கியுள்ள அமெரிக்கர்கள் உட்பட 200 பேர் விரைவில் அங்கிருந்து பத்திரமாக வெளியேறும் சூழல் கனிந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக விடைபெற்றது. இதனையடுத்து அங்கு எஞ்சியிருந்த அமெரிக்கர்கள் இன்னும் சிலரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

காபூல் விமான நிலையம் விமானங்களை இயக்கத் தகுதியற்றதாக மாறியிருந்தது. இந்நிலையில் கத்தார் அரசின் முயற்சியின் பேரில் காபூல் விமான நிலையம் சீரமைக்கப்பட்டு வருகிறது. கத்தார், தனது தொழில்நுட்ப வல்லுநர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிவைத்தது. ஆப்கன் தொழில்நுட்ப குழுவும் கத்தார் குழுவும் இணைந்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

அந்தக் குழுவில் இருக்கும் வல்லுநர் ஒருவர், காபூல் விமான நிலையம் 90% தயார் நிலையை அடைந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்.

காபூல் விமானநிலையத்தில் தற்போதைய நிலவரம் குறித்து செய்தி வெளியிட்ட கத்தார் செய்தி நிறுவனம் ஒன்று, "விமானநிலையத்தில் பெண்கள், குழந்தைகள், முதியோர் என நூற்றுக் கணக்கானோர் உடைமைகளுடன் காத்திருக்கின்றனர். காத்திருக்கும் 200 பேருமே அமெரிக்கர்கள் அல்ல. அமெரிக்கர்கள் 100 பேருக்கும் குறைவாகவே இருக்கின்றனர். மற்றவர்கள் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றியவர்கள், ஆப்கானிஸ்தானைச் சாராதவர்கள்" என்று தெரிவித்துள்ளது.

கத்தார் தூதர் பேட்டி:

ஆப்கானிஸ்தானுக்கான கத்தார் நாட்டில் சிறப்பு தூதர் முத்லாக் அல் காத்ஹானி கூறுகையில், "இன்றைய தினம் வரலாற்றுச் சிறப்புமிக்க தினம். கத்தார் தொழில்நுட்பக் குழுவினர் ஆப்கன் குழுவினருடன் இணைந்து விமான நிலையத்தை சீரமைத்து வருகிறது. சர்வதேச விமானங்களை இயக்கும் அளவுக்கு விமான நிலையத்தை திறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. விமான நிலையத்தில் ரேடார், லேண்டிங் தொழில்நுட்பக் கருவிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. தொலைதொடர்பு சாதனங்கள் சரியாக இயங்குகின்றன. நிறைய சவால்களின் ஊடே இது நடந்துள்ளது. இன்னும் சில தொழில்நுட்பப் பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டியுள்ளது" என்றார்.

இதற்கிடையில் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, "ஆப்கனிலிருந்து வெளியேற விரும்பும் அமெரிக்கர்களை பத்திரமாக மீட்பது தொடர்பாக தொடர்ந்து அமெரிக்க பல வழிகளிலும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கர்கள் நிச்சயமாக பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x