Published : 09 Sep 2021 04:35 PM
Last Updated : 09 Sep 2021 04:35 PM

தடுப்பூசி செலுத்தியதில் முன்னோடி: இஸ்ரேலில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா: காரணம் என்ன?

படம் உதவி ட்விட்டர்

உலகளவில் கரோனா தடுப்பூசி செலுத்தியதை வேகப்படுத்தி , முகக்கவசம் இல்லாமல் மக்கள் வாழ்க்கையை நடத்தலாம் என்று முன்னோடியாக இருந்த இஸ்ரேல் நாட்டில் தற்போது கரோனா வைரஸ் தீவிரமாக அதிகரித்து வருகிறது.

கடந்த 3 மாதங்களாக இஸ்ரேல் நாட்டில் கரோனா வைரஸின் உருமாறிய டெல்டா வகை வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இஸ்ரேலியில் உள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியநிலையிலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது,

இதனால் தற்போது குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு வேகப்படுத்தியுள்ளது, மீண்டும் இஸ்ரேலில் பல்வேறு போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இஸ்ரேலில் பெரும்பாலும் மக்களுக்கு அமெரிக்காவின் ஃபைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 85 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டவுடன் ஜூன் மாதத்திலிருந்து மக்கள் முகக்கவசம் அணியாமல் செல்லலாம், கூட்டங்கள், விழாக்கள், விருந்துகள் நடத்துவதில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என அரசு அறிவித்தது.

இதனால் மக்கள் கட்டற்றற்ற சுதந்திரத்தோடு வீதிகளிலும், சாலைகளிலும், சுற்றுலாத் தளங்களிலும் அலைந்தனர். பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன, கேளிக்கை விடுதிகள் திறக்கப்பட்டன.

பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் இருந்தாலும், தீவிரமாகக் கண்காணிக்கப்படவில்லை. விளைவு, இஸ்ரேலில் ஆபத்தான டெல்டா வகை உருமாறிய கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது.

ஆனால், தற்போது டெல்டா வகை வைரஸ் இஸ்ரேலில் பரவத் தொடங்கி, வேகமெடுத்துள்ளது. இதனால், கடந்த இரு மாதங்களாக கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று அறிவித்த இஸ்ரேல் சுகாதாரத்துறை, மக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல அறிவுறுத்தியுள்ளது.

சர்வதேச ஊடகங்களின் செய்தியின்படி, “இஸ்ரேலில் பெரும்பகுதி ஃபைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசியைவிட ஃபைஸர் தடுப்பூசி வீரியம் குறைந்ததாக இருக்கிறது, விரைவாக நோய் எதிர்ப்புச்சக்தியை இழந்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால்தான் இஸ்ரேல் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியபோதிலும் கரோனாவில் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் பார் இலான் பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல் துறை பேராசிரியர் சிரில் ஹோஹென் கூறுகையில் “கரோனா வைரஸிலிருந்து மிகச் சிறப்பாக மார்டர்னா தடுப்பூசி பாதுகாக்கிறது. ஆனால், மற்ற இரு தடுப்பூசிகளிலும் பெரிதாக நோய் எதிர்ப்புச் சக்தி உடலில் நிலைக்கவில்லை, கரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திய நாடுகளில் முன்னணியாக இஸ்ரேல் இருந்து வருகிறது. குழந்தைகளுக்கு பைஸர் தடுப்பூசிசெலுத்தும் பணி ஒருபுறம், விரைவுப்படுத்தப்பட்டு வரும்நிலையில், மற்றொருபுறம் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாள்தோறும் ஒரு லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும்பணி தொடக்க நிலையில் இருப்பதால், கரோனா பரவுவது குழந்தைகள் மூலம்தான் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது அதிக பரவல் வேகம் கொண்ட டெல்டா வைரஸ்கள் முதலில் குழந்தைகளைத் தாக்கி அவர்கள் மூலம் பெற்றோருக்கு தொற்றியிருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இஸ்ரேலில் அதிகபட்சமாக கடந்த 2ம் தேதி 16 ஆயிரம்பேர் வரை கரோனாவில் பாதி்க்கப்பட்டுள்ளனர்.

கட்டுப்பாடுகளை நீக்கியது, முகக்கவசம் அணியாமல் இருந்தது, சமூக இடைவெளியை மறந்தது, கூட்டமான இடங்களுக்கு மக்கள் செல்வது போன்றவைதான் மீண்டும் தொற்றின் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

ஆனால், பெரும்பாலோனர் தடுப்பூசி செலுத்தியிருப்பதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது கடந்த முதல் மற்றும் 2-ம் அலையோடு ஒப்பிடுகையில் குறைவாக இருக்கிறது.

இருப்பினும் , 1,100 பேர் தற்போது கரோனாவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர், அதில் 700 பேர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். கடந்த ஒருவாரத்தில் உலகளவில் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களில் சராசரி இஸ்ரேலில்தான் அதிகம் என்பது தொற்றின்வேகம் அதிகரித்து வருவதை காட்டுகிறது.

கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளை மீண்டும் இஸ்ரேல் அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி 100 சதுரமீட்டருக்குள் இருக்கும் கடையில் ஒரு வாடிக்கையாளர் மட்டுமே இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு இடங்கள், விளையாட்டு மைதானங்கள், கலாச்சார மையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், ஹோட்டல்கள், தேநீர் கடைகள் போன்றவற்றுக்கு செல்வோர் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், அல்லது கரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டிருக்க வேண்டும். இதற்கான க்ரீன் பாஸ் சான்றுகளை காண்பித்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x