

அனைவரும் நாடு திரும்புங்கள்; எல்லோருக்கும் பொது மன்னிப்பு உண்டு என ஆப்கன் பிரதமர் தம் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இடைக்கால அரசை நிறுவியுள்ளனர். அதன் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த் பதவியேற்றுள்ளார்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதிக்குள் 1.50 லட்சம் பேர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினர். இவர்களில் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினரும் அடங்குவர். அத்துடன் தலிபான் ஆட்சியின் கெடுபிடிகளுக்கு அஞ்சி ஆப்கன் மக்களும் பெருமளவில் வெளியேறினர். குறிப்பாக அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் உயிருக்கு அஞ்சி வெளியேறினர்.
இந்நிலையில், ஆப்கன் பிரதமர் ஹசன் அகுந்த் அளித்துள்ள பேட்டி ஒன்றில், "ஆப்கானிஸ்தானின் முந்தைய அரசில் பணியாற்றி ஊழியர்கள் அனைவரும் தைரியமாக நாடு திரும்பலாம். தூதரகங்களுங்கும், தூதரக அதிகாரிகளுக்கும் முழு பாதுகாப்பை நாங்கள் வாக்குறுதியாக அளிக்கிறோம். மனித உரிமை செயற்பாட்டாளர்களும், இயக்கங்களும் இங்கே வரலாம். நாங்கள் உலக நாடுகளுடனும் சர்வதேச அமைப்புகளுடனும் நட்புறவை பேண விரும்புகிறோம்.
உயிர்ப் பலியும், நிதி இழப்பும் நாங்கள் எங்கள் கடந்த காலங்களில் நிறையவே சந்தித்துவிட்டோம். ஆப்கானிஸ்தானில் ரத்தம் சிந்திய காலமும், படுகொலைகள் நடந்த காலங்களும் முடிந்துவிட்டன. அதற்கான விலையை நாங்கள் கொடுத்துவிட்டோம். தலிபான் படையினர் இப்போது பண்படுத்தப்பட்டுள்ளனர். இங்கே இதுவரை யாரையும் பழிதீர்க்கும் வகையில் படையினர் கொலை செய்யவில்லை.
ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய சட்டப்படி நல்லது நடக்க வேண்டும். வெற்றிகள் வாய்க்கப்பெற வேண்டும். நலத்திட்டங்கள் நடைபெற வேண்டும். ஆகையால் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட இந்த முயற்சியில், அனைவரும் இணைந்து கொள்ள அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் அமெரிக்காவுடன் இணக்கமாகப் பணியாற்றியிருந்தாலும் கூட பொது மன்னிப்பு அளிக்கப்படும். அனைவரும் தாயகம் திரும்பவும்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.
தலிபான்கள் 33 பேர் கொண்ட அமைச்சரவையை அறிவித்துள்ளனர். இதில், 14 பேர் 1996ல் தலிபான் ஆட்சியில் இடம்பெற்றவர்கள். 5 பேர் க்யூபாவில் உள்ள அமெரிக்காவின் குவான்டனாமோ சிறையில் இருந்தவர்கள், 12 பேர் இரண்டாம் தலைமுறை தலிபான்கள். தலிபான் அமைச்சரவையில் பெண்களுக்கோ, சிறுபான்மையினருக்கோ வாய்ப்பளிக்கப்படாதது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.