

வடகொரிய நாட்டில் நேற்று நள்ளிரவு அதிபர் கிம் தலைமையில் பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது. இதில் வான வேடிக்கைகளும், ஜெட் விமானங்களின் அணிவகுப்பும் களைகட்டின. வீரர்கள் ஆரஞ்சு நிற கவச உடை அணிந்து அணிவகுத்து வந்தனர்.
வடகொரியா நிறுவப்பட்டதன் 73 வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்த கொண்டாட்டடங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அந்நாட்டின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான கேஎன்சிஏ தெரிவித்துள்ளது. தலைநகர் பியாங்யாங்கில் உள்ள கிம் இல் சுங் சதுக்கத்தில் இந்த பிரம்மாண்ட நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாட்டின் ராணுவ பராக்கிரமங்களைப் பிரபலப்படுத்துவது போல் அணிவகுப்பும் நடத்தப்பட்டது. ஆனால், கடந்த அக்டோபர் மாதம் இதே போன்றதொரு நிகழ்வில் நாட்டின் ஏவுகணைகளை கிம் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார். அதுபோல் இம்முறை எதுவும் செய்யப்படவில்லை. வடகொரியாவின் சிவப்புப் படை மிகவும் பிரபலமானது. இந்தப் படையில் 5.7 மில்லியன் பேர் உள்ளனர். இந்தப் படைப் பலத்துக்கு நேற்றைய பேரணியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
வெறும் ராணுவ தளவாடங்களைக் காட்டாமல் இந்த முறை படைகளைக் கவுரவப்படுத்திய கிம், நாட்டின் பொருளாதார நிலவரத்துக்கும், கரோனா பிரச்சினைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை உணர்த்துவதாக சீயோலில் உள்ள பல்கலைக்கழக பேராசிரியர் யாங் மூ ஜின் தெரிவித்துள்ளார்.
பால்கனியில் இருந்து பார்வையிட்ட கிம்:
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், நள்ளிரவு நிகழ்ச்சியை பால்கனியில் இருந்தவாறு கையசைத்து ரசித்துப் பார்த்தார்.
ஒரே ஆண்டில் வடகொரியா மூன்றாவது முறையாக இத்தகைய பேரணியை நடத்தியுள்ளது. கடந்த அக்டோபரில் அதிகாலையில் நடத்தப்பட்ட பேரணியில் இதுவரை உலகுக்குக் காட்டிராத கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணையை பேரணியில் இடம்பெறச் செய்திருந்தார். அதன் பின்னர் 2021 ஜனவரியில் இதே போன்றதொரு பேரணி நள்ளிரவில் நடத்தப்பட்டது.
வடகொரியா கரோனா அச்சத்தால் தொடர்ந்து எல்லைகளை மூடிவைத்துள்ளது. அணு ஆயுத சோதனைகளால் பல்வேறு நாடுகளிடமிருந்தும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ளது வடகொரியா. ஆனால், இவற்றையெல்லாம் சுமுக பேச்சுவார்த்தை மூலம் சரி செய்ய கிம் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்ற விமர்சனமும் உள்ளது. மக்கள் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் இத்தகைய பிரம்மாண்டப் பேரணியை கிம் நடத்தியதற்குக் காரணம் மக்கள் மத்தியில் தனிமைப்படுத்துதலை உற்சாகமாகக் கடைபிடிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை ஹனோய் உச்சிமாநாட்டில் அப்போதைய அதிபர் ட்ரம்ப்புடன் நடந்தமுடிந்த நிலையிலேயே இருக்கிறது. எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், கடந்த மாதம் வடகொரியா புளோடோனியம் அணு உலையை இயக்கத் தொடங்கியுள்ளது. இது குறித்து ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி முகமை வருத்தமும் அச்சமும் தெரிவித்துள்ளது.
இத்தகைய சூழலில் தான் வடகொரிய அதிபர் நள்ளிரவு பேரணியை நடத்தி முடித்துள்ளார்.