Published : 08 Sep 2021 09:37 PM
Last Updated : 08 Sep 2021 09:37 PM

நாட்டைவிட்டு கட்டுகட்டாக பணத்துடன் வெளியேறினேனா? ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் நீண்ட விளக்கம்

நாட்டைவிட்டு வெளியேறும்போது ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி ஹெலிகாப்டர் நிறைய பணத்தைக் கொண்டு சென்றதாக தகவல்கள் வெளியான நிலையில் தான் என்ன மாதிரியான சூழலில் எப்படி வெளியேறினேன் என்பதை விளக்கியுள்ளதோடு ஆப்கன் மக்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க, நேட்டோ படைகளுக்கு எதிராகப் போராடிய தலிபான்கள் வசம் தற்போது அந்நாடு வந்துவிட்டது. அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கியவுடன் ஆப்கானிஸ்தானை தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர்.

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி காபூல் முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். அவர் வெளியேறியது குறித்து பல்வேறு தகவல்களும் வெளியாகின. இறுதியாக அஷ்ரப் கனி குடும்பத்தினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் புகுந்ததும் உறுதியானது.

இந்நிலையில், அஷ்ரப் கனி தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
காபூலில் இருந்து நான் திடீரென்று வெளியேறியது குறித்து ஆப்கன் மக்களுக்கு விளக்கமளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். அன்றைய தினம் அதிபர் மாளிகை சிப்பந்தி என்னிடம் பேசினார். நிலைமை 1990களில் இருந்ததுபோல் இருக்கிறது. தெருவெங்கும் தலிபான்களின் ஆதிக்கம். இத்தகையச் சூழலில் நீங்கள் உயிரைப் பணையம் வைக்காதீர்கள் என்றார். காபூலை விட்டு வெளியேற நான் எடுத்த முடிவு தான் என் வாழ்நாளிலேயே மிகக் கடினமான முடிவு. ஆனால், துப்பாக்கிகளின் முழக்கத்துக்கு முடிவு கட்ட, காபூலைக் காப்பாற்ற, 60 லட்சம் மக்களைக் காப்பாற்ற நான் வெளியேறுவது மட்டுமே ஒரே வழி என்று நம்பினேன். என் வாழ்வின் 20 ஆண்டுகளை ஆப்கன் மக்களுக்காக நான் செலவிட்டுள்ளேன். ஆப்கனில் ஜனநாயகம் தழைத்தோங்க நான் பாடுபட்டிருக்கிறேன். மக்களைக் கைவிட்டுச் செல்ல வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

இந்தத் தருணம் நான் ஏன் வெளியேறினேன் என்பதை மட்டுமே முன்னிலைப்படுத்தி நீண்ட விளக்கம் அளிக்க உகந்தது அல்ல. விரைவில் அது குறித்து மிக நீண்ட விளக்கம் அளிப்பேன். இப்போது நான் என் மீதான சில அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பற்றி பேச விரும்புகிறேன். நான் என்னுடன் மில்லியன் கணக்கில் டாலர்களை எடுத்துக் கொண்டு நாட்டைவிட்டு வெளியேறியதாக தகவல்கள் பரப்பப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. ஊழல் தான் ஆப்கானிஸ்தானின் பெரும் சாபம். எனது ஆட்சிக் காலத்தில் ஊழலுக்கு எதிராக போராடுவது மையப்புள்ளியாக இருந்தது. என்னுள் இருக்கும் அசுர குணம் எதையும் அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுத்துவிடாது.

நானும் எனது மனைவியும் நிதி விவகாரங்களில் வெளிப்படையாகவே இருந்துள்ளோம். எனது சொத்துக்களை நான் பகிரங்கமாக அறிவித்திருக்கிறேன். எனது மனைவி லெபனானைச் சேர்ந்தவர். அவருடைய சொத்து விவரங்களும் வெளிப்படையாக பட்டியலிடப்பட்டுள்ளன. ஆகையால் எனது சொத்து விவரம் குறித்து ஐ.நா. மேற்பார்வையில் சோதனை செய்ய நான் அழைப்பு விடுக்கிறேன். எனது சொத்து விவரங்களை பொது மக்களின் பார்வைக்கு வெளியிடத் தயாராக இருக்கிறேன்.

எனது வாழ்நாள் முழுவதுமே, ஆப்கானிஸ்தானில் ஜனநாயக குடியரசு அமைய வேண்டும். அது மட்டுமே அமைதியான, வளமான நாட்டை உருவாக்கும் என்று நம்பினேன், நம்புகிறேன். எனது நாட்டிற்கான எனது சேவைக் காலம் முழுவதுமே எனது செயல்களை அனைத்துமே 2004ல் உருவாக்கப்பட்ட இஸ்லாமிப் ரிபப்ளிக் ஆஃப் ஆப்கானிஸ்தானின் அரசியல் சாசன எல்லைக்கு உட்பட்டே இருந்தது. அந்த அரசியல் சாசனம், பேச்சுவார்த்தைகளுக்கு எப்போதுமே மிகப்பெரிய அந்தஸ்த்தைக் கொடுத்திருந்தது. நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல அமைதிப் பேச்சுவார்த்தைகளை பெரிதும் ஊக்குவித்தோம்.

கடந்த 40 ஆண்டுகளில் தேசத்துக்காக தங்களின் இன்னுயிர் ஈந்த அனைவரின் தியாகத்தையும் நான் மதிக்கிறேன். போற்றுகிறேன். எனது முடிவும் எனக்கு முந்தையவர்களுக்கு நேர்ந்தது போல் துன்பியலாகவே முடிந்திருக்கிறது என்பதில் நான் மிகுந்த வேதனையடைகிறேன். அத்தகைய முடிவு மீண்டும் நடந்திருக்காமல் வேறு ஒரு நல்ல முடிவை நோக்கி நான் நகர முடியாமல் போனதற்காக ஆப்கன் மக்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். ஆப்கன் மக்களுக்கான எனது உறுதிப்பாடு என்றுமே மாறாது. எனது வாழ்க்கையின் எஞ்சிய காலத்திற்கான வழிகாட்டியாக அது இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x