

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது கற்கள் வீசப்பட்ட சம்பவம் அவருக்கு தேர்தல் களத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவின் எதிரொலி என்று பேசப்படுகிறது.
கனடா நாட்டில் விரைவில் பிரதமர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஏற்கெனவே இரண்டு முறை பிரதமராக இருந்துவிட்ட ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் முனைப்புடன் களமிறங்கியுள்ளார்.
ஆனால், சமீபத்திய எதிர்ப்புகள் அவருக்குத் தேர்தல் களத்தில் சற்றே சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.
திங்கள்கிழமையன்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கிளம்பிய ஜஸ்டின் ட்ரூடோ மீது சிலர் கற்களை வீசி எறிந்தனர். இது தொலைக்காட்சி செய்திகளில் ஒளிபரப்பானது. இது குறித்து ஜஸ்டின் கூறும்போது, சிலர் என் மீது கற்களை வீசி எறிந்தனர். அவர்கள் பித்துநிலையின் உச்சத்தில் இருந்தனர். அரசியல் பேரணியில் மக்கள் இவ்வாறாக நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல என்று கூறினார்.
தேர்தலில் ஜஸ்டினை எதிர்த்துப் போட்டியிடும் ஓ டூலியும் இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறுகையில், அரசியல் வன்முறையை எந்த காரணத்தைச் சொல்லியும் நியாயப்படுத்த முடியாது. நீங்கள் எவ்வளவு கோபமாக இருந்தாலும் ஒரு நபரின் மீது எதையும் வீசி எறிவது சரியானது அல்ல என்று கண்டித்துள்ளார்.
ட்ரூடோவுக்கு தேர்தல் களத்தில் ஆதரவு அதிகமாக இருந்த நிலையில் அவர் கரோனா தடுப்பூசி கட்டாயம் என்று அறிவித்ததாலேயே அவரின் தேர்தல் வெற்றி வாய்ப்பு மங்கி வருவதாக சில கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஜஸ்டின் ட்ரூடோ செல்லும் இடமெல்லாம் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. கடந்த மாதம் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு பேரணியையே அவர் ரத்து செய்யவேண்டியதாக இருந்தது.
ஓ டூலியும் கரோனா தடுப்பூசிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தாலும் கூட அவரது கட்சியின் நிலைப்பாடு கரோனா கட்டுப்பாட்டு மையங்கள், கட்டாய தடுப்பூசித் திட்ட எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாகவே உள்ளது.
கனடா மக்கள் தொகையில் 83% மக்கள் தடுப்பூசிக்கு தகுதியானவர்கள். இவர்களில் 76% பேர் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர்.
தேர்தலுக்கு வெறும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் கனடா பிரதமருக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றே கடைசி நேர கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.