Published : 08 Sep 2021 03:52 PM
Last Updated : 08 Sep 2021 03:52 PM

பள்ளிகள் மூலம் வைல்டு கார்டு என்ட்ரி கொடுக்கிறதா கரோனா?- இஸ்ரேலின் சமீபத்திய தொற்று எண்ணிக்கை உலகுக்குச் சொல்லும் பாடம் என்ன?

கரோனா வைரஸுக்கு எதிராக உலகம் கொண்டுள்ள ஒற்றை ஆயுதம் தடுப்பூசி. தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் உலகளவில் மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு வந்துள்ளது.

இந்நிலையில், உலகிலேயே நாட்டு மக்கள் தொகையில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசியை செலுத்தி சாதனை படைத்தது இஸ்ரேல். அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 9 மில்லியன். கடந்த ஏப்ரல் மாதம் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் கரோனாவை சமாளிக்கத் திணறிக் கொண்டிருந்த வேளையில் இஸ்ரேல் மக்களுக்குப் பொது இடங்களைத் திறந்துவிட்டது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என்று அறிவித்தது. ஆனால், டெல்டா வகை வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலில் மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பிரேக்த்ரூ தொற்று எனக் கூறப்படும் இரண்டு தடுப்பூசி போட்டவர்களுக்கும் தொற்று ஏற்படுவது அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் அவர்களின் வாயிலாக மற்றவர்களுக்கும் தொற்று பரவுகிறது. செப்டம்பர் தொடங்கியதிலிருந்தே இஸ்ரேலில் மீண்டும் கரோனா வைரஸ் பிரச்சினையை உண்டாக்கி வருகிறது.

"இஸ்ரேலில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் தொற்று குறைவாக இருக்கிறது. பூஸ்டர் டோஸும் இதற்கு ஒரு காரணம். இப்போது 12 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் தான் கவனிக்கப்பட வேண்டியவராக உள்ளனர்" என்று அந்நாட்டு தொற்று நோய்த் தடுப்பு நிபுணர் குழுவின் தலைவர் ரான் பாலிஸர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் வரலாறு காணாத அளவுக்கு பரிசோதனைகளை அதிகரிப்பது கரோனா வைரஸின் போக்கை அறிய உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தேயும் எதிர்ப்புசக்தி..

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மத்தியில் தேயும் எதிர்ப்புசக்தி இஸ்ரேல் அரசின் புதிய கவனத்தைப் பெற்றுள்ளது. இது குறித்து ரான் பாலிஸர், "தேயும் எதிர்புசக்தி தான் இப்போதைக்கு அரசு மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய இன்னொரு விவகாரம். இஸ்ரேல் உருவாக்கும் இந்தத் தரவு உலகம் முழுவதும் மற்ற நாடுகள் பூஸ்டர் டோஸின் தேவை, தாக்கம் பற்றி அறிந்து கொள்ள ஆவணமாக அமையும்" என்று கூறியுள்ளார்.

செப்டம்பர் 6 நிலவரத்தின்படி இஸ்ரேலில் 28% பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டோரின் சதவீதம் 64. இஸ்ரேலில் டைஸர் பயோ என் டெக் தடுப்பூசியே வழங்கப்பட்டு வருகிறது. அங்கு 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமே பூஸ்டர் டோஸ் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வைல்டு கார்டு என்ட்ரி கொடுக்கிறதா கரோனா?

இஸ்ரேல் தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி என கரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துவர பள்ளிகள் மூலம் புதிதாக தொற்று வைல்டு கார்டு என்ட்ரி கொடுப்பதாக இஸ்ரேல் தொற்றுநோய்த் தடுப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உலகளவில் உள்ள கரோனா புள்ளிவிவரங்களைப் பார்க்கும் போது பள்ளிகள் திறப்பு கரோனா பரவலுக்கு முக்கியக் காரணியாக இருப்பதும் தெரியவதுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கரோனா பரவல் வரைபடத்தில் இஸ்ரேல் மீண்டும் சிவப்பு ஜோனில் இடம்பெற்றுள்ளது.

ஸ்காட்லாந்து நாட்டில் 68% மக்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அங்கு ஆகஸ்ட் இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அங்கு கடந்த 7 நாட்களாக பதிவாகியுள்ள கரோனா வைரஸ் பரவல் விகிதம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

கரோனாவுடனான வாழ்க்கை இப்படித்தான் இருக்குமா?

இஸ்ரேலில் ஷீபா மெடிக்கல் மையத்தின் பேராசிரியரான மருத்துவர் இயல் லெஷாம் "கரோனாவின் போக்கு குறித்த தனது பார்வையில், முழுமுடக்கம் இல்லாத ஒரு வாழ்க்கையை மக்களுக்கு உறுதி செய்ய வேண்டும், கரோனாவால் உயிரிழப்புகளையும், மருத்துவமனை வாசத்தையும் தவிர்க்க வேண்டும் என்றால் அந்த வாழ்க்கை இப்படித்தான் இருக்கும். ஓராண்டுக்கு முன்னர் நாம் முழுமுடக்கத்தை மட்டுமே நம்பியிருந்தோம். ஆனால், இப்போது பள்ளிகளைத் திறந்து, பொருளாதாரத்துக்கான வர்த்தக நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொண்டும் ஒரு வார தொற்று எண்ணிக்கை 50,000 என்றளவில் கையாள்கிறோம். இதில் தீவிர பாதிப்போ, மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவோரோ மிகவும் குறைவு. இவையெல்லாம் தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசியால் நடந்துள்ளது. இனி இப்படித்தான் கரோனாவுடன் வாழ வேண்டியிருக்கும்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x