

ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் ஆதிக்கத்தின் கீழ்வந்துவிட்டது. முல்லா ஓமருக்கு நெருக்கமான முல்லா அப்துல் கனி பராதர் பிரதமராக நியமிக்கப்படுவார் எனக் கூறப்பட்ட நிலையில் தலிபான் தீவிரவாதிகள் தலைமையில் அமையும் இடைக்கால அரசில் பிரதமராக முல்லாஹ் ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
2001,செப்டம்பர் 11 அமெரி்க்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் தகர்த்த போதே தலிபான்கள் ஆட்சிக்கு பிரச்சினை வந்துவிட்டது. அந்தத் தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுத்திருந்த தலிபான்கள் மீது அமெரிக்க ராணுவம் போர் தொடுத்து, அவர்களின் ஆட்சியை அகற்றியது. ஜனநாயக ரீதியிலான அதிபர் தேர்தல் நடத்தி புதிய அரசியலமைப்புச் சட்டமும் நிறுவப்பட்டன.
ஆனால் தோல்வி கண்ட தாலிபன்கள் மெல்ல தங்களை பலப்படுத்திக் கொண்டனர், 20 ஆண்டுகள் தலிபான்களுக்கும், அமெரிக்க, நேட்டோ, ஆப்கான் அரசுப் படைகளுக்கும் இடையே நடந்த போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள், லட்சக்கணக்கில் காயமடைந்தனர்.
இறுதிவரை அமெரிக்கா, நேட்டோ படைகளுக்கு முழுமையான வெற்றி கிடைக்காததால், கடந்த மாதம் 31-ம் தேதியோடு ஆப்கனிலிருந்து அமெரி்க்க, நேட்டோ படைகள் முழுமையாக வெளியேறின. தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கன் முழுமையாக வந்தது.
ஆப்கனில் தலிபான் தீவிரவாதிகள் தலைமையில் விரைவில் புதிய அரசு அமையும் எனக் தலிபான்கள் தரப்பில் கூறப்பட்ட நிலையில் இடைக்கால அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிரதமராக முல்லாஹ் ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மௌலவி அப்துல் சலாம் ஹனாபி நியமிக்கப்பட்டுள்ளனர்.
யார் இந்த முல்லாஹ் ஹசன் அகுந்த் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த1990களி்ல் ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியில் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக, தலிபான் தீவிரவாத அமைப்பை நிறுவிய முல்லா ஓமருக்கு மிகவும் நெருக்கமான நபராக முல்லாஹ் ஹசன் அகுந்த் வலம் வந்தார். பார்ப்பதற்கு கவர்ந்திழுக்கும் தோற்றத்தைப் பெற்றிருந்தாலும், முல்லாஹ் அகுந்த் புரிந்து கொள்ள மிகவும் கடினமானவர்.
தலிபான்களில் மற்ற தலைவர்களில் இருந்து வேறுபட்ட முல்லாஹ் அகுந்த் சோவியத்-ஆப்கன் போரில் ஈடுபடவில்லை. முல்லா ஓமருடன் இருந்தாலும், முஜாஹிதீன்களுக்கு எதிராகவும் சண்டையிடவில்லை.
இஸ்லாம் மதத்தின் தீவிரப் பற்றாளரான அகுந்த், பழமைவாத எண்ணங்கள் நிரம்பியவர். தலிபான்களுக்கு ஆலோசனை வழங்கிடும், உயர்மட்ட முடிவுகளை எடுக்கும் மதகுருமார்கள் அடங்கிய சூரா கவுன்சிலில் ஏறக்குறைய 20 ஆண்டுகள் அகுந்த் இருந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தலிபான்களின் உயர்மட்டத் தலைவரான மௌலவி ஹெய்பத்துல்லா அகுந்தசாவுடன் ஏறக்குறைய 20 ஆண்டுகள் நெருக்கமான உறவில் இருந்துள்ளார் அகுந்த்.
முல்லா ஓமரின் 1995-2001ம் ஆண்டு ஆட்சியில் தலிபான்களின் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் முல்லாஹ் அகுந்த் செயல்பட்டுள்ளார். தலிபான் அமைப்பை முல்லா ஓமருடன் சேர்ந்து நிறுவியர்களில் ஒருவர் முல்லா ஹசன் அகுந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லாஹ் அகுந்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமென்றால், 2001ம் ஆண்டு பாமியானில் 6-ம் நூற்றாண்டு பழமையான புத்தர் சிலைகளை உடைக்கப்பட்டதற்கான சூத்திரதாரியே இவர்தான்.
தொடக்கத்தில் முல்லாஹ் ஓமருக்கு அந்த சிலைகளை உடைப்பதில் விருப்பமில்லை. ஆனால், அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த அகுந்த், ஆப்கான் மக்களுக்கு மனிதநேய உதவிகளை தரமறுக்கும் ஐ.நா., பழங்காலசிலைகளை பாதுகாக்க மட்டும் யுனெஸ்கோ மூலம் கோடிக்கணக்கான டாலர்களை வழங்குகிறது என்று முல்லா ஓமரை கொம்புசீவிவிட்டார் அகுந்த். இதனால் ஆத்திரமடைந்த முல்லாஹ் ஓமர், புத்தர் சிலைகளை உடைக்க உத்தரவிட்டு அதை தரைமட்டமாக்கினார்.
வெளியுறவுத்துறை அமைச்சராக அகுந்த் இருந்தாலும், சூரா குழுவில் இடம் பெற்று மதரீதியான ஆலோசனைகள், வளர்ச்சிக்கு அதிகமான முக்கியத்துவத்தை அகுந்த் அளித்தார்.
தீவிரமான இஸ்லாம் சிந்தனைகளைக் கொண்ட தியோபந்திஸத்தில் அகுந்த் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். 2001ம் ஆண்டு ஆப்கானிலிருந்து தலிபான்கள் ஆட்சி அகற்றப்பட்டவுடன், தன்னுடைய இருப்பை பாகிஸ்தானுக்கு அகுந்த் மாற்றிக் கொண்டார். அங்கிருந்தவாரே மதரீதியான, ஆன்மீகரீதியான வழிகாட்டல்களையும், அறிவுரைகளையும் தலிபான்களுக்கு வழங்கினார்.
தலிபான்கள் அமைப்புக்குள் இரு பிரிவுகள் உள்ளன. ஒன்று துப்பாக்கி ஏந்திச் செல்லும் ராணுவப் பிரிவு, மற்றொன்று தீவிர இஸ்லாத்தை காக்கும் தியோபந்திஸத்தைக் கொண்ட அரசியல் பிரிவாகும். இதில் முல்லாஹ் அகுந்த் தீவிரமான தியோபந்திஸத்தில் ஈடுபாடு கொண்டவர்.
ஆப்கனின் பிரதமராக முதலில் முல்லாஹ் அப்துல் கனி பராதர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. ஏனென்றால், முல்லாஹ் ஓமருக்கு மிகவும் நெருக்கமானவாக இருந்த பராதர், தலிபான் படையில் சேர்ந்து பல்வேறு தியாகங்களை செய்துள்ளார். ஆதலால், ஓமர் இறப்புக்குப்பின் பராதர் தலைமையில்தான் தலிபான் அமைப்பு ஏறக்குறைய இயங்கியது.
ஆனால், தலிபான்களுக்கு ஆதரவாகச் செயல்படும், பாகிஸ்தானை மையமாகக் கொண்ட வலிமையான ஹக்கானி நெட்வொர்க்கிற்கும், பராதருக்கும் இடையே உள்ளார்ந்த அதிகாரப் போட்டி நிலவி வந்தது. தலிபான்களின் நலம் விரும்பியாகவும், அரசியல் ரீதியான ஆதரவுகளைப் பெற்றுத்தரும் அமைப்பாக இருந்துவரும் ஹக்கானி நெட்வொர்க், உள்ளூர் குழுக்களிடையே தலிபான்களுக்கு ஆதரவைப் பெற்றுத்தருவதில் முனைப்பாக இருந்தது.
அதுமட்டுமல்லாமல் தலிபான்கள் படைப்பிரிவிலும் ஹக்கானி நெட்வொர்க்கை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் இருக்கின்றனர்.
ஆனால், பெண்களுக்கு உரிமைகள் வழங்குவது, சர்வதேச அமைப்புகளுடனும், தொண்டு நிறுவனங்களுடனும் சேர்ந்து பணியாற்றுவதில் ஹக்கானி நெட்வொர்க்கிற்கும், பராதருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால், ஹக்கானி நெட்வொர்க்கின் அழுத்தத்தால் பராதர் பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
அதேநேரம் ஹக்கானி நெட்வொர்க், பராதர் இருதரப்பும் ஏற்கும் வகையில் முல்லாஹ் அகுந்த் தேர்வு செய்யப்பட்டார். ஹக்கானி நெட்வொர்க், பராதர் இடையே ஏற்பட்ட உள்ளார்ந்த மோதல் காரணமாகவே இடைக்கால அரசு அமைவதிலும் தாமதம் நிலவி வந்தது.
இதன்படி தலிபான்களின் முறைப்படியான அறிவிப்பில் ஆப்கனின் இடைக்கால அரசில் பிரதமராக முல்லாஹ் அகுந்த், துணைப் பிரதமராக பராதரும், ஹக்கானி நெட்வொர்க்கின் இரு உறுப்பினர்களும் அரசில் முக்கிய பதவியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதலிபான்கள் மத்தியில் ஹக்கானி நெட்வொர்க்கின் செல்வாக்கைக்க ாட்டுகிறது.
இஸ்லாமிய பழமைவாத நம்பிக்கையில் திளைத்த அகுந்த், மதவிஷயங்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர். இதன் காரணமாகவே தீவிரமான இஸ்லாமிய அரசு நிறுவ வேண்டும் என்பதில் அகுந்த் ஆர்வமாக இருக்கிறார்.
இதனால், தலிபான்கள் தலைமையில் அமையும் புதிய அரசில் ஷாரியத் சட்டப்படி அரசு நடக்கும் என்று கூறும் தலிபான்கள், பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் மதச்சிறுபான்மையினர், பூர்வக் குடியினரும் உரிமைகளை மறுப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அறிகுறிதான் அமைச்சரவைப் பட்டியலி்ல் ஒரு பெண் அமைச்சர்கூட இல்லை.
கடந்த 1990களில் தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டது, கடுமையான பாலினப் பிரிவினை அமல்படுத்தப்பட்டு, தீவிரமான மத சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் மீண்டும் தலிபான்கள் ஆட்சியில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அனைத்து நாடுகளுடனும் சுமூகமான உறவுகளை வைக்கவே விரும்புகிறோம் என தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் நாடுகளுடன் நெருக்கமாக இருக்கும் தலிபான்கள் மற்ற நாடுகளுடன் நட்புறவை இதே அளவுக்கு வளர்ப்பார்களா, அவர்களை சர்வதேச சமூகம் ஏற்குமா என்பது இனிமேல் தெரியும்.