Published : 06 Sep 2021 04:00 PM
Last Updated : 06 Sep 2021 04:00 PM

இந்த ஆண்டு இறுதிக்குள் வளர்ந்த நாடுகளிடம் 1.2 பில்லியன் கூடுதல் கரோனா தடுப்பூசிகள் இருக்கும்: சர்வதேச ஆய்வில் தகவல்

இந்த ஆண்டு இறுதிக்குள் வளர்ந்த நாடுகளிடம் 1.2 பில்லியன் கூடுதல் கரோனா தடுப்பூசிகள் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி தொடர்பான புள்ளிவிவரங்களை அலசி ஆராயும் சர்வதேச நிறுவனம் ஒன்று இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி மேற்கத்திய நாடுகளில் இந்த மாத நிலவரப்படி 500 மில்லியன் கரோனா தடுப்பூசிகள் உள்ளன. இவற்றில் 360 மில்லியன் ஏழை நாடுகளுக்குக் கொடுக்கப்பட உள்ளன. இருப்பினும், இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்கா, பிரிட்டன், ஐரொப்பிய யூனியன், கனட, ஜப்பான் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிடம் 1.6 பில்லியன் டோஸ் கூடுதல் தடுப்பூசி இருக்கும். அவற்றை, தானமாக வழங்கப்படுவதற்காக இதுவரை ஏதும் திட்டமிடப்படவில்லை.

உலகளவில் கரோனா தடுப்பூசியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் உள்ள பேதத்தை சீர் செய்யும் வகையில், ஐ.நா.,வின் துணையுடன் இயங்கு கோவாக்ஸ் அமைப்பு 190 நாடுகளுக்கும் குறிப்பாக 92 குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கும் தடுப்பூசியை கொண்டு சேர்க்க வேண்டும். அதுவும் குறிப்பாக 20% மக்களுக்காவது தடுப்பூசியை கொண்டு சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், பெரும் பணக்கார நாடுகள் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் கொண்டுள்ள தொடர்பால் தடுப்பூசி கோவாக்ஸ் அமைப்புக்கு வந்து சேர்வதில் சிக்கல் இருக்கிறது. இதனால் தான் தடுப்பூசி பதுக்கல் நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமையன்று ஜி20 சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் தடுப்பூசி ஏற்றத்தாழ்வு குறித்துப் பேசிய உலக சுகாதார மையத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனம், தடுப்பூசி பேதம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. உலகம் முழுவதும் இதுவரை 500 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவற்றில் 75% தடுப்பூசிகள் 10 நாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் தடுப்பூசித் திட்டம் 2% மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத் தலைவர் ஜான் கெங்காசாங் கூறும்போது, ஆப்பிரிக்காவில் கரோனா தடுப்பூசி திட்டம் செயல்பாடு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்று கூறினார்.

ஜி20 மாநாட்டில் பேசிய பிரிட்டன் முன்னாள் பிரதமர் கார்டன் பிரவுன், பணக்கார நாடுகள் தடுப்பூசிகளைப் பதுக்கிவைத்துக் கொள்வது நெறியற்ற செயல். ஜி7 நாடுகளின் தலைவர்கள் உடனடியாக தங்கள் வசம் உள்ள கூடுதல் தடுப்பூசிகளை ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும். நாம் இப்போது புதுவிதமான போட்டியில் இருக்கிறோம். மக்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதுதான் அந்தப் போட்டி. ஆனால் இந்தப் போட்டியில் மேற்கத்திய நாடுகளின் கை ஓங்கி இருக்கிறது என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x