

போரெனும் புதைகுழியில் இருந்து ஆப்கானிஸ்தான் மீண்டுவிட்டதாகக் கூறியிருக்கிறார் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகீத்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறுவதாக அறிவித்து வெளியேற ஆரம்பித்தவுடனேயே தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர். படிப்படியாக ஒவ்வொரு மாகாணமாகக் கைப்பற்றிய தலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று தலைநகர் காபூலை தங்கள்வசம் கொண்டுவந்தனர். இதனையடுத்து அமெரிக்க மற்றும் மேற்கத்தியப் படைகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர். ஆகஸ்ட் 31 ஆம் அமெரிக்காவின் கடைசி படையும் அங்கிருந்து வெளியேறியது.
ஆனால், தலிபான்களுக்கு பிரச்சினை வேறு உருவத்தில் வந்தது. பஞ்ச்ஷீர் மலைப் பகுதியிலிருந்து தலிபான் எதிர்ப்பு தேசிய முன்னணி சவால் விடுத்தது. அந்த அமைப்பின் தலைவர் அகமது மசூதுவும், ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலேவும் தலிபான்களுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டோம். போரை எதிர்கொள்ளவும் தயார் என்று அறிவித்தனர். இந்நிலையில், பஞ்ச்ஷீர் பகுதியை நோக்கி தலிபான்களின் படை விரைந்தது. அங்கு நடந்த சண்டையில் பஞ்ச்ஷீர் மாகாணத்தை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா: இந்த வெற்றியுடன் போரெனும் புதைகுழியில் இருந்து நமது தேசம் மீண்டுவிட்டது என்று கூறியுள்ளார். அதேவேளையில் தலிபான் எதிர்ப்புப் படையினரோ நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது. அதன் தலைவர்கள் அகமது மசூத், அம்ருல்லா சாலே ஆகியோர் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இத்தகையச் சூழலில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி ப்ளின்கின் கத்தார் செல்லவிருக்கிறார். அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர் அங்கு நிலவும் அசாதாரண குழப்பமான சூழல் குறித்து ஆலோசிக்கிறார்.