Last Updated : 06 Sep, 2021 12:37 PM

 

Published : 06 Sep 2021 12:37 PM
Last Updated : 06 Sep 2021 12:37 PM

ஆப்கனில் கணவர், குழந்தைகள் முன்னிலையில் கர்ப்பிணிப் பெண் போலீஸ் சுட்டுக் கொலை: தலிபான்கள் வெறிச்செயல்

கோப்புப்படம்

காபூல்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் கணவர், குழந்தைகள், குடும்பத்தார் முன்னிலையில் பெண் போலீஸ் ஒருவரைத் தலிபான்கள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் இந்தக் கொடூரமான சம்பவம் நடந்துள்ளது என்று ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர் பிலால் சர்வாரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இந்த முறை ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு உரிய மரியாதை, உரிமைகளை வழங்குவோம். பெண்கள் வேலைக்குச் செல்லவும், சுகாதாரத்துறையில் பணியாற்றவும் அனுமதிப்போம், கல்வி கற்கவும் அனுமதிப்போம் என்று தலிபான்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், இதுபோன்று பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நிகழ்த்துவது மீண்டும் கடந்த 1995-2001 ஆண்டு கால தலிபான்களின் கொடூரமான ஆட்சியை நினைவூட்டுகிறது.

கோர் மாகாணம் பிரோஸ்கோ பகுதியைச் சேர்ந்தவர் பானு நிகரா. ஆப்கானிஸ்தான் காவல் துறையில் பணியாற்றும் நிகரா 6 மாதக் கர்ப்பிணி. அவருக்கு ஏற்கெனவே இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு தலிபான் தீவிரவாதிகள் பானு நிகராவை அவரின் குழந்தைகள், கணவர், குடும்பத்தார் முன்னிலையில் சுட்டுக் கொலை செய்தனர் என்று பத்திரிகையாளர் சர்வாரி தெரிவித்துள்ளார்.

ஆனால், பெண் போலீஸாரைச் சுட்டுக்கொன்றதற்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என்று தலிபான்கள் மறுக்கின்றனர். தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லாஹ் முஜாஹித் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பெண் போலீஸார் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தெரியும்.

ஆனால், தலிபான்கள் கொல்லவில்லை என்பதை உறுதி செய்கிறேன். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தனிப்பட்ட பகை காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். நாங்கள் ஏற்கெனவே கூறியதுபோல், கடந்த ஆட்சியில் அரசில் பணியாற்றியவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதை உறுதி செய்வோம்” எனத் தெரிவித்தார்.

பெண் போலீஸ் பானு நிகரா | படம் உதவி: ட்விட்டர்

பெண் போலீஸ் கொல்லப்பட்டதை நேரில் பார்த்தவர்கள் பிபிசி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “தலிபான்கள் அந்த பெண் போலீஸாரை அவரின் கணவர், குழந்தைகள் முன்னிலையில் அடித்து உதைத்தனர். மற்றவர்கள் பதில் ஏதும் பேச முடியாமல் தவித்தனர். சனிக்கிழமை இரவு துப்பாக்கியுடன் வந்த 3 பேர் அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் சென்றனர். துப்பாக்கி வைத்திருந்த 3 பேரும் அரபி மொழி பேசினர்” எனத் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை காபூல் நகரில் தலிபான் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டம் நடத்திய ஒரு பெண் ஆர்வலரைத் தலிபான்கள் அடித்து உதைத்த சம்பவம் நடந்தது. இந்தக் காட்சியை ஆர்வலர் நர்கிஸ் சதாத் வீடியோ எடுத்து வெளியிட்டார்.

பெண்களுக்கு உரிமை தேவை, பிரதிநிதித்துவம் தேவை எனக் கோரி ஹீரத் நகரில் கடந்த வாரம் பெண்கள் போராட்டம் நடத்திய நிலையில் பெண் போலீஸார் கொல்லப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x