

பஞ்ச்ஷீர் பகுதியை கைப்பற்றிய தாக நம்பி, மகிழ்ச்சிப் பெருக்கில்ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். 41 பேர் படுகாயமடைந்தனர்.
பெண் நீதிபதிகளுக்கு ஆபத்து
இதுகுறித்து காபூலை சேர்ந்த பெண் நீதிபதி ஒருவர் கூறும்போது, “என்னால் தண்டிக்கப்பட்ட 4 பேர் எனது வீட்டுக்கு வந்து என்னை தேடியுள்ளனர். உயிருக்கு அஞ்சி தலைமறைவாக உள்ளேன். என்னைப் போன்று பல பெண் நீதிபதிகள் ஆங்காங்கே பதுங்கி வாழ்கின்றனர். தலிபான்களிடம் இருந்து எங்களைக் காப்பாற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஆப்கானிஸ்தான் பெண் நீதிபதிகளுக்கு பயிற்சி அளித்த அமெரிக்க நீதிபதி பேட்ரிக்கா கூறும்போது, “ஆப்கானிஸ்தான் பெண் நீதிபதிகளின் நிலைமை பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது. அவர்களை காப்பாற்றுவது நமது கடமை” என்று தெரிவித்தார்.
சமூக ஆர்வலர்கள் நிலை..
சர்வதேச நீதிபதிகள் குழு, சர்வதேச சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து ஆப்கானிஸ்தான் பெண் நீதிபதிகளை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் நீதிபதிகள் மட்டுமன்றி ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைக்காக போராடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்களின் நிலைமையும் கேள்விக்குறியாக உள்ளது.
தலிபான்களுக்கு எதிராக தலைநகர் காபூலில் நேற்று பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி அவர்களை தலிபான்கள் விரட்டியடித்தனர். - பிடிஐ