

அமெரிக்காவில் சீக்கியர் ஒருவர் தனது டர்பனை (தலைப்பாகையை) அகற்ற மறுத்ததால் அவரை விமானத்தில் ஏறவிடாமல் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
திங்கள் கிழமை மதியம் மெக்சிகோ சிட்டியில் இருந்து நியூயார்க் செல்ல அமெரிக்க குடியுரிமை பெற்ற சீக்கியர் ஒருவர் விமான நிலையத்துக்கு வந்தார்.
அவரது பெயர் வாரிஸ் அலுவாலியா (41). அவர் ஏரோமெக்சிகோ விமானம் மூலம் நியூயார்க் செல்ல பயணச்சீட்டு வாங்கியிருந்தார். போர்டிங் பாஸ் வாங்குவதற்காக அவர் அதிகாரிகளை அணுகியுள்ளார். அவருக்கு போர்டிங் பாஸ் வழங்கப்பட்டது. அத்துடன் பாதுகாப்பு சோதனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
அலுவாலியா பாதுகாப்பு சோதனைக்குச் சென்றபோது அதிகாரிகள் அவரது தலைப்பாகையை அகற்றுமாறு கூறியிருக்கின்றனர். ஆனால், அதற்கு அவர் உடன்படவில்லை. இதனால் அவருக்கு விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அலுவாலியா இன்ஸ்டாகிரமில், "இன்று காலை மெக்சிகோ சிட்டி விமான நிலையத்தில் என் தலைப்பாகையை அகற்றச் சொன்னார்கள். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் என்னை அவர்கள் ஏரோமெக்சிகோ விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை" எனக் குறிப்பிட்டு தனது புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். இது குறித்து நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தொலைக்காட்சிகளுக்கு வாரிஸ் அளித்த பேட்டியில், "என்னிடம் அதிகாரிகள் தலைப்பாகையை அகற்றுமாறு அறிவுறுத்தினர். ஆனால் இது எனது நம்பிக்கை. நான் எப்போதெல்லாம் பொதுவிடத்தில் தோன்றுகிறேனோ அப்போதெல்லாம் இதை அணிந்து கொள்கிறேன். எனவே இதை அகற்ற முடியாது எனக் கூறினேன். ஆனால் அதிகாரிகள் சமாதானம் அடையவில்லை. அவர்களுக்குள் பேசிக் கொண்ட அதிகாரிகள், "தலைப்பாகையை அகற்றும் வரை உங்களுக்கு ஏரோமெக்சிகோ விமானத்தில் பயணிக்க அனுமதி இல்லை" என்றனர். பின்னர் விமானத்தில் ஏற முடியாது என தடுத்து நிறுத்தினர்" என்றார்.
அமெரிக்காவில் சீக்கிய மதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆர்வலராகவும் அலுவாலியா செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.