

கறுப்பின இளைஞரை விலங்கு என அடையாளப்படுத்தியதற்கு மன்னிப்பு கோரிய மார்க் ஜக்கர்பர்கின் பேஸ்புக் நிறுவனம், பேஸ்புக் பக்கத்திலிருந்து டாபிக் ரெகமன்டேஷன் ஃபீச்சர் எனப்படும் வசதியையும் செயலிழக்கச் செய்துள்ளது.
இது குறித்து பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
இது நிச்சயமாக தெளிவான ஏற்கமுடியாத பிழை. ஆன்லைனிலிருந்து டாபிக் ரெகமன்டேஷன் ஃபீச்சர் நீக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் டாபிக் ரெகமன்டேஷன் ஃபீச்சரின் பரிந்துரையால் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் நாங்கள் வருந்துகிறோம். அந்த வசதியை மறு ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளோம். இதுபோன்று இனிமேலும் நடக்காமல் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
முகத்தைக் கண்டறியும் மென்பொருளான ஃபேஸியல் ரெகக்னிஷன் மென்பொருள்கள் பலவும் நிறத்தின் அடிப்படையிலேயே செயல்படுவதாக ஏற்கெனவே சிவில் உரிமைகள் குழுக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் பேஸ்புக்கும் தற்போது சிவில் உரிமைகள் குழுவின் கண்டனத்துக்கு தொடர்ந்து ஆளாகி வருகிறது. அண்மையில் பேஸ்புக் பயனாளி ஒருவர் பிரிட்டிஷ் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் சில கறுப்பின இளைஞர்கள் இடம்பெற்றிருந்தனர். அப்போது, திடீரென பாப் அப் ஆன பரிந்துரை ஒன்றில் இதுபோன்று மேலும் விலங்குகளின் வீடியோக்களைப் பார்க்க விரும்புகிறீர்களா? என்று கேட்டுள்ளது.
இதுதான் பேஸ்புக் மன்னிப்பு கேட்கக் காரணமாகியுள்ளது. ஆனால் பேஸ்புக் இவ்வாறு இன வெறி கருத்துகளின் தளமானதற்கு மன்னிப்பு கோருவது இது முதன்முறை அல்ல. ஏற்கெனவே கடந்த 2020 ஆம் ஆண்டு கறுப்பின இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கு குறித்து இனவெறி ததும்பும் கருத்துகள் பேஸ்புக்கில் குவிந்தன. அதைத் தடுக்குமாறு ஃப்ரீ ப்ரெஸ், ஏடிஎல் போன்ற சமூக நீதிக் குழுக்கள் போராடியது குறிப்பிடத்தக்கது.