போராளிகளின் கோட்டை பஞ்ஷிர் வீழ்ந்தது?-  தலிபான்கள் கட்டுப்பாட்டில் முழு ஆப்கன்

போராளிகளின் கோட்டை பஞ்ஷிர் வீழ்ந்தது?-  தலிபான்கள் கட்டுப்பாட்டில் முழு ஆப்கன்
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு தலைவணங்காத பகுதியாக இருந்து வந்த பஞ்ஷிர் பள்ளத்தாக்கை கைபற்றி முழு ஆப்கனையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். எனினும் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் இதனை உறுதிப்படுத்தவில்லை.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் அந்நாட்டின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றினர். தலைநகர் காபூலும் அவர்கள் கட்டுப்பாட்டில் வந்தது.

அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனர்.

இந்தநிலையில் பஞ்ச்ஷிர் மாகாண மக்கள் தலிபான்களை ஏற்கவில்லை. அங்கு தலிபான்களுக்கு எதிராக தீவிர சண்டை நடந்து வந்தது. இதனால் குந்தூஸ், பாக்லன், கபிஸா, பர்வான், தக்கார் போன்ற பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.

பஞ்ஷிர் பகுதி போராளிகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 1990களில் தலிபான்கள் ஆதிக்க சக்தியாக இருந்தபோது பஞ்ஷிரை அவர்களால் நெருங்க இயலவில்லை.

ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே அந்தக் கோட்டையில் இருந்து வந்தவர். தலிபான்களை நீண்ட காலமாக எதிர்த்து வருகிறார்.

இந்தநிலையில் பஞ்ஷிர் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். பஞ்ஷிர் பள்ளத்தாக்கை தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக ராய்ட்டர் செய்தி நிறுவனமும் தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனத்துக்கு தலிபான் தளபதி ஒருவர் அளித்துள்ள பேட்டியில் ‘‘அல்லாவின் கருணையால் முழு ஆப்கனும் தலிபான்கள் வசம் வந்துள்ளது. பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் தொந்தரவு கொடுத்து வந்த கூட்டம் விரட்டப்பட்டது. முழு ஆப்கனும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது’’ என தெரிவித்துள்ளார். அதேசமயம் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே தப்பியோடி விட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என ஆப்கன் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in