நியூசிலாந்தில் ஆறு மாதங்களுக்குப் பிறகு கரோனா முதல் உயிரிழப்பு
நியூசிலாந்தில் ஆறு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக கரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “நியூசிலாந்தில் ஆகஸ்ட் இறுதி வாரத்திலிருந்து கரோனா மீண்டும் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் பிறகும் மக்கள் தொகை அடர்த்தி காரணமாக ஆக்லாந்தில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை நியூசிலாந்து அரசு விதித்தது.
இந்த நிலையில் நியூசிலாந்தில் ஆறு மாதங்களுக்குப் பிறகு கரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆக்லாந்தைச் சேர்ந்த 90 வயதைக் கடந்த பெண் ஒருவர் கரோனாவால் பலியானார்.
ஆக்லாந்தில் மட்டும் 700க்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்தில் இதுவரை 3,748 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தீவிரம் குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கூறும்போது, “நாம் மேற்கொள்ளும் கடுமையான நடவடிக்கைகள் எவ்வளவு முக்கியமானவை என்பதை இந்த இறப்பு நினைவூட்டுகிறது” என்று தெரிவித்தார்.
டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 19 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
