

பாஞ்ஷிர் மலையில் தலிபான் எதிர்ப்பாளர்களுக்கும் தலிபான்களுக்கும் இடையேயான சண்டை வலுத்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பார்வான் மாகாணத்தில் மக்கள் கடந்த 4 நாட்களாகவே அச்சத்தில் உள்ளனர். பலரும் சொந்த ஊரைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
போராளிகளின் கோட்டை
பாஞ்ஷிர் பகுதி போராளிகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 1990களில் தலிபான்கள் ஆதிக்க சக்தியாக இருந்தபோது பாஞ்ஷிரை அவர்களால் நெருங்க இயலவில்லை. சோவியத் படைகள் கூட அப்பகுதியை நெருங்க முடியாத அரணாக அகமது ஷா மசூத் வைத்திருந்தார். சலேன் அந்தக் கோட்டையில் இருந்து வந்தவர். தலிபான்களை நீண்ட காலமாக எதிர்த்து வருபவர். 1990களில் இளம் வயதில் இருந்தபோதே அவர் தனது பெற்றோரை இழந்தார். அப்போது முதல் அவர் மசூதுடன் இணைந்து தலிபான்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்.
1996ல் தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியபோது அவர் அங்கிருந்து தப்பினார். தலிபான்கள் அவரது சகோதரியைக் கைது செய்து துன்புறுத்திக் கொலை செய்தனர். 1996 சம்பவம் தலிபான் மீதான தனது பார்வையை மாற்றியமைத்ததாக அவர் ஒரு முறை கூறியிருப்பது நினைவுகூரத்தக்கது.
தலிபான்களிடம் சரணடையமாட்டேன். அவர்களுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டோம். இன்னொரு புதிய போருக்கு தயாராகவே இருக்கிறோம் என்று ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே தெரிவித்திருந்தார்.
அதன்படியே, பாஞ்ச்ஷிர் மாகாணத்தில் தற்போது தலிபான்களுக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது. தலிபான் தரப்பிலிருந்து தாங்கள் பாஞ்ஷிர் பகுதியை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் என்று கூறப்படுகிறது.
அதேபோல், தலிபான் எதிர்ப்பாளர்கள் தரப்பில் தலிபான்கள் விரட்டப்பட்டு வருகின்றனர் என்று கூறுகின்றனர். குந்தூஸ், பாக்லன், கபிஸா, பர்வான், தக்கார் போன்ற பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.
ஏற்கெனவே நாட்டைவிட்டு லட்சக்கணக்கானோர் வெளியேறிவிட்டனர். இப்போது உள்நாட்டிலிருந்தே கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேறி வருகின்றனர்.