Published : 03 Sep 2021 05:18 PM
Last Updated : 03 Sep 2021 05:18 PM

3 டன் எடை; அணு ஆயுதத்துக்கு இணையான சக்தி: தென் கொரிய ஏவுகணையின் சிறப்பம்சங்கள்

தென் கொரிய நாடு மூன்று டன் எடையில் அணு ஆயுதத்துக்கு நிகரான சக்தி கொண்ட ஏவுகணையை தயாரித்து வருகிறது. இது குறித்து தென் கொரியாவின் யோன்ஹேப் செய்தி ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதிய ஏவுகணை தரைவிட்டு தரை பாயக் கூடியது. 350 முதல் 400 கி.மீ தூரம் செல்லக் கூடியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவுகணையின் சிறப்பம்சங்கள் என்ன?

இந்த ஏவுகணை தரைவிட்டு தரை பாயக் கூடியது. 350 முதல் 400 கி.மீ தூரம் செல்லக் கூடியது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும், அணுஆயுத ஏவுகணைகளையும் இடைமறித்து அழிக்கக் கூடியது. இது சுரங்கங்களைக் கூட ஊடுருவி ஏவுகணை கட்டமைப்புகளை அழிக்கும் திறன் வாய்ந்தது. வட கொரியாவின் அனைத்துப் பகுதிகளையும் தகர்க்கக் கூடியது. அண்மையில் தென் கொரியா ஏவுகணை தயாரிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா விலக்கிக் கொண்டது. அதன் பின்னரே இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டது.
கொரிய தீபகற்பத்தில் பாதுகாப்பை உறுதி செய்யவும் அமைதியை நிலைநாட்டவும் வலுவான, அதிக தூரம் சென்று இலக்கைத் தாக்கக் கூடிய, துல்லியமான ஏவுகணைகள் தயாரிப்போம் என்று தென் கொரிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏவுகணை தயாரிப்பில் போட்டாபோட்டி:

ஏவுகணை தயாரிப்பில் வட கொரியாவும் தென் கொரியாவும் போட்டாபோட்டி போட்டு செயல்படுகின்றன. 2020ல் தென் கொரியா Hyunmoo-4 ஹியுன்மூ 4 என்ற குறைந்த தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணையைத் தயாரித்தது. உடனே வடகொரியாவும் எஸ்ஆர்பிஎம் எனப்படும் குறைந்த தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை சோதித்தது. தென் கொரியா தனது பட்ஜெட்டில், 315.2 ட்ரில்லியன் வான் (அந்நாட்டு நாணயம்) அதாவது அமெரிக்க டாலர் மதிப்பில் 273 பில்லியன் டாலரை ராணுவத்துக்கு ஒதுக்கியுள்ளது.

2030க்குள் ஆசியாவின் பெரும்பாலான நாடுகளிடம் பலம் வாய்ந்த ஏவுகணைகள் இருக்கும் என்று ராணுவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x