Last Updated : 03 Sep, 2021 12:14 PM

 

Published : 03 Sep 2021 12:14 PM
Last Updated : 03 Sep 2021 12:14 PM

காஷ்மீர் முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது: தலிபான்கள் பேட்டி

தலிபான் தீவிரவாதஅமைப்பின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் | படம் உதவி: ட்விட்டர்.

காபூல்

உலகில் முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும், காஷ்மீரில் வாழும் முஸ்லிம்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம் என்று தலிபான் தீவிரவாத அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் அந்நாட்டைத் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.

அடுத்த சில நாட்களில் ஈரான் மாடலில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கப்போவதாகவும், தலிபான் தீவிரவாத அமைப்பின் உயர்மட்டத் தலைவர் அதிபராகவோ அல்லது பிரதமராகவோ பொறுப்பேற்பார் என்றும் தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் கத்தார் தலைநகர் தோஹாவில் தலிபான் தீவிரவாத அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர், ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாயுடன் கத்தாருக்கான இந்தியத் தூதர் தீபக் மிட்டல் சந்தித்துப் பேசினார்.

அந்தச் சந்திப்பின்போது, “ஆப்கானிஸ்தான் மண்ணை இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதச் செயல்கள் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று இந்தியா சார்பில் கோரப்பட்டது. மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்பவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தச் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஆரிந்தம் பக்சி நேற்று அளித்த பேட்டியில், “ஆப்கானிஸ்தான் மண்ணை இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதச் செயல்கள் நடத்த, பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது எனத் தலிபான்கள் தரப்பிடம் இந்தியா சார்பில் கோரப்பட்டது” எனத் தெரிவித்தார்.

இந்தச் சூழலில் தலிபான் தீவிரவாத அமைப்பின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் பிபிசி (உருது) சேனலுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியுள்ளார். அவர் பேட்டியில் கூறுகையில், “நாங்கள் முஸ்லிம்களாக இருப்பதால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டாலும் குரல் எழுப்புவோம். காஷ்மீர் முஸ்லிம்கள், இந்திய முஸ்லிம்கள், எந்த நாட்டிலும் முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுக்க உரிமை இருக்கிறது. அதே நேரம் எந்த நாட்டுக்கு எதிராகவும் ஆயுதம் ஏந்துவது எங்கள் கொள்கை அல்ல.

நாங்கள் முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுப்போம். ஏனென்றால் முஸ்லிம்கள் எங்கள் சொந்தங்கள், எங்கள் சொந்த மக்கள். உங்கள் சட்டப்படி அவர்களுக்குச் சமமான உரிமை வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஆனால், ஆப்கனைத் தலிபான்கள் கைப்பற்றியபின் ஷாஹீன் அளித்த பேட்டியில், “ காஷ்மீர் விவகாரம் இரு நாடுகளுக்கு இடையிலான விவகாரம், அது உள்நாட்டுப் பிரச்சினை” எனத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் மண் தீவிரவாதிகளின் சொர்க்கபூமியாக மாறிவிடுவோம் என மத்திய அரசு அஞ்சுகிறது. இதற்கு முன் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, அல்கொய்தா ஆகியவை ஆப்கானிஸ்தான் காலூன்ற முயன்று தோல்வியில் முடிந்தது, அதேசமயம், சன்னி மற்றும் வஹாபி தீவிரவாதக் குழுக்கள் தலிபான்களுடன் சேரலாம் என மத்திய அரசு அஞ்சுகிறது.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புச் சூழல் கவலையளிப்பதாக இருப்பதால், அடுத்து வரும் நாட்களில் அங்கு பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கும், தலிபான்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தலிபான்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயல்வார்கள். தற்போது தலிபான்கள் பலவீனமாக இருப்பதால், ஐஎஸ்ஐ அமைப்பின் வலையில் விழுவதற்கு வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் பாகிஸ்தானின் ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் ஒருவர் பேசுகையில், “இந்தியாவிடம் இருந்து காஷ்மீர் சுதந்திரம் பெற தலிபான்கள் உதவ வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x