Published : 02 Sep 2021 09:24 PM
Last Updated : 02 Sep 2021 09:24 PM

சீனா தான் எங்களின் முக்கிய பங்காளி; தேசத்தை மீள்கட்டமைப்பு செய்ய சீன நிதியையே நம்பியுள்ளோம்: தலிபான் செய்தி தொடர்பாளர்

சீனா தான் எங்களின் முக்கிய பங்காளி; தேசத்தை மீள்கட்டமைப்பு செய்ய சீன நிதியையே நம்பியுள்ளோம் என தலிபான் செய்தித் தொடர்பாளார் ஜபிபுல்லா முஜாகிதீன் தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் இருந்து வெளியாகும் லா ரிபப்ளிக்கா ( La Repubblica ) என்ற பத்திரிகைக்கு ஜபிபுல்லா முஜாகிதீன் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆப்கனிலிருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறுவதாக அறிவித்தபின், தலிபான் தீவிரவாதிகள் ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தலைநகர் காபூலைக் கைப்பற்றியவுடன் அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பினார். கடந்த மாதம் 31-ம்தேதியோடு ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் முற்றிலுமாக வெளியேறிவிட்டன. இதனால், ஆப்கனுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக தலிபான்கள் கொண்டாடி வருகின்றனர். புதிய அரசை அவர்கள் முறைப்படி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இத்தாலி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஜபிபுல்லா கூறியிருப்பதாவது:

தேசத்தை மீள் கட்டமைப்பதில் சீனா தான் எங்களின் முக்கிய பங்காளி. அவர்களுடனான இணக்கமான போக்கு எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை திறந்துவைக்கும். சீனா எங்கள் நாட்டில் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறது. எங்கள் தேசத்தை மீள் கட்டமைப்பு செய்யவும் தயாராக இருக்கிறது.

நாட்டில் வளமான தாமிர சுரங்கங்கள் உள்ளன. சீனாவின் உதவியால் இவற்றை மீண்டும் இயக்க முடியும். சீனா இந்தச் சுரங்கங்களை நவீனப்படுத்தும். அதுமட்டுமல்ல சீனாவின் வழியாகத்தான் நாங்கள் உலகச் சந்தையையும் அடைய முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் நியூ சில்க் ரோடு தலிபான்களால் கொண்டாடப்படும் பகுதி. இப்பகுதியைத் தான் சீனாவும் மேம்படுத்தி தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்புகிறது.

பெண்களுக்கு என்னமாதிரியான சுதந்திரம் வழங்கப்படும்?

"எதிர்காலத்தில் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயில பெண்களுக்கு அனுமதியளிக்கப்படும். பெண்கள் செவிலியராகவும், காவல்துறையிலும் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் அமைச்சரகங்களில் உதவியாளராக இருக்கலாம் ஆனால் பெண்கள் அமைச்சராக வாய்ப்பில்லை" என்றும் ஜபிபுல்லா அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.



FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x