Published : 02 Sep 2021 07:59 PM
Last Updated : 02 Sep 2021 07:59 PM

சீனா மீது கண்காணிப்பு அவசியம்; பாக்ரம் விமானப் படை தளத்தை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்பு: அமெரிக்க முன்னாள் தூதர் நிக் ஹேலி எச்சரிக்கை

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்ட நிலையில், அங்குள்ள பாக்ரம் விமானப் படை தளத்தை சீனா இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்புள்ளது. அதற்கு பாகிஸ்தானையும் சீனா பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க முன்னாள் தூதர் நிக் ஹேலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்ட நிலையில், அங்குள்ள பாக்ரம் விமானப் படை தளத்தை சீனா இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்புள்ளது. அதற்கு பாகிஸ்தானையும் சீனா பயன்படுத்திக் கொள்ளக்கூடும். இதனால் அமெரிக்காவுக்கு நிறைய சவால்கள் ஏற்படும். அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருப்பதை நாடு உறுதி செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நாட்டின் சைபர் பாதுகாப்பு வலுவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆப்கானிஸ்தானில் தலிபான்களை எதிர்க்காமல் அவசர கதியில் வெளியேறியது அமெரிக்க கூட்டாளிகள் பலர் மத்தியில் அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரஷ்யா போன்ற நாடுகள் இப்போது அமெரிக்கா மீது சைபர் தாக்குதலுக்கு தயாராகிவிட்டனர்.

நிக் ஹேலி

இத்தருணத்தில் ஜோ பைடன் முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால், தனது ஐரோப்பிய கூட்டாளிகளின் நம்பிக்கையைப் பெறுவதே. ராணுவத்தை இன்னும் நவீனப்படுத்த வேண்டும். அப்போது தான் நமை நோக்கிக் காத்திருக்கும் சைபர் அச்சுறுத்தலையும், பயங்கரவாத அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள முடியும். அதேபோல், ஐரோப்பாவில் உள்ள நேச நாடுகளுடன் மட்டுமல்லாது இந்தியா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளுடன் அமெரிக்க வலுவான உறவை ஏற்படுத்த வேண்டும். உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டும்.

தைவானாக இருக்கட்டும், உக்ரைன், இஸ்ரேல், இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா என எந்ஹ நாடாக இருந்தாலும் அவர்களுடன் நெருக்கமான உறவை அமெரிக்கா உடனடியாக முன்னெடுக்க வேண்டும். அவர்களுக்கு நமது பலம் தேவை. நமக்கும் அவர்களின் துணை தேவை. இதுவே அமெரிக்காவின் முதன்மைப் பணி. இரண்டாவதாக, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை உலகம் முழுவதும் விஸ்தரிக்கத் தயாராக இருக்கும் சமிக்ஞையைக் கடத்த வேண்டும். ஏனெனில், ஜிஹாதிகள் இப்போது தலிபான் வெற்றியால் புத்துயிர் பெற்று தங்களின் படைசேர்க்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். உலகம் முழுவதும் இது வேகமெடுத்துள்ளது. அதனால், எச்சரிக்கை அவசியம். ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஜோ பைடன் எடுத்த முடிவால் அமெரிக்க ராணுவத்தின் ஒவ்வொரு வீரர், வீரர்களின் குடும்பத்தாரும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x