

மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையிலிருந்து ராணுவ வீரர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா நேற்று உறுதி அளித்தார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 68-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் சிறிசேனா பேசியதாவது:
கடந்த 2009-ல் நடந்த விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப் போருக்குப் பிறகு தேவையான பணிகளை செய்ய அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமை யிலான அரசு தவறிவிட்டது. இதனால்தான் மனித உரிமை மீறப் பட்டதாக இலங்கை மீது குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உத்தரவிட்டுள் ளது.
எனினும் இந்த விசாரணையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். இதை பொறுமையுடனும், தொலை நோக்குப் பார்வையுடனும் அணுக வேண்டியது மிகவும் முக்கியம். அதேநேரம் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களின் நலனைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஐநா மனித உரிமை கவுன்சி லின் ஆணையர் ஜெயித் ராத் அல் ஹுசைன் சனிக்கிழமை இலங் கைக்கு வர உள்ள நிலையில் சிறிசேனா இவ்வாறு கூறியிருக் கிறார்.
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கை மனித உரிமை மீறல் குறித்து, சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் குழு விசாரிக்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை இலங்கை அரசு அப்போது ஏற்றுக்கொண்டது. ஆனால், சர்வதேச நீதிபதிகள் இந்தக் குழுவில் இடம்பெறுவார்கள் என சிறிசேனா சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசிய கீதத்துக்கான தடை நீக்கம்
இலங்கையில் தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு அதிகாரப்பூர் வமற்ற வகையில் தடை விதிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், நாட்டின் 68-வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கொழும்புவில் உள்ள கல்லே பேஸ் கிரீன் பூங்காவில் நடை பெற்ற விழாவில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தேசிய கீதம் பாடினர். சிறிசேனா அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து தமிழர் களுடன் சமரசம் ஏற்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அதற்கு உதாரணமாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.