Published : 02 Sep 2021 06:28 PM
Last Updated : 02 Sep 2021 06:28 PM

காபூல் விமான நிலையம் மீண்டும் இயக்கம்; விரைவில் நற்செய்தி: கத்தார் வெளியுறவு அமைச்சர் நம்பிக்கை

காபூல் விமான நிலையத்தை மீண்டும் திறப்பது பற்றி தலிபான்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக கத்தார் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக வந்தது. அதன் பின்னர் அங்கிருந்து பொதுமக்களும் வெளிநாட்டவரும் கூட்டம் கூட்டமாக வெளியேறினர். சுமார் 1 லட்சத்து 23 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். இதனால், காபூல் விமான நிலையமே ஒரு போர்க்களம் போல் காணப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியேறியது. கடைசி மூன்று நாட்கள் ஆப்கான் விமான நிலையத்தைக் குறிவைத்து ஐஎஸ் கோராசன் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் அங்கு நிலைமை மோசமானது. ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் எப்படியும் வெளியேறிவிடலாம் என்று நம்பிக்கையில் இருந்த மக்களுக்கு அது பேரிடியாக அமைந்தது. இந்நிலையில் காபூல் விமான நிலையமும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.

இந்நிலையில் காபூல் விமான நிலையத்தை இனி யார் இயக்குவது என்ற பெரிய கேள்வி எழுந்தது. துருக்கியிடம் தலிபான்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அந்நாட்டு அதிபர் அதற்கு இசைவு தெரிவிக்கவில்லை. இதனால், காபூல் விமான நிலையத்தை மீண்டும் திறப்பது குறித்து கத்தார் மத்தியஸ்தம் செய்து வருகிறது. இது தொடர்பாக கத்தார் வெளியுறவு அமைச்சர் அல் தானி, பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து அல் தானி, காபூல் விமான நிலையத்தை மீண்டும் இயக்குவது தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம். அடுத்த சில நாட்களில் நல்ல செய்தியைக் கேட்பீர்கள் என்று கூறினார்.

டொமினிக் ராப் (இடது); அல் தானி (வலது)

டொமினிக் ராப் கூறுகையில், ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து தலிபான்களுடன் அவசியம் பேச வேண்டியுள்ளது. ஆனால், இப்போதைக்கு தலிபான்கள் ஆட்சியை பிரிட்டன் அங்கீகரிக்கவில்லை. அவர்கள் எதிர்கால நடவடிக்கைகளைப் பொறுத்தே பிரிட்டனின் பார்வை மாறும் என்று கூறினார்.

காபூல் விமான நிலையம் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்ட பின்னர் விமான நிலையம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. அங்கு 3ல் ஒருவர் கடும் பட்டினி மற்றும் இதர பாதிப்புகளில் தவிப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x