

மாடர்னா கரோனா தடுப்பூசி மருந்து பாட்டிலுக்குள் கருப்பு துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் 10 லட்சம் தடுப்பூசி மருந்தை ஜப்பான் அரசு நிறுத்தி வைத்து உள்ளது.
கரோனா நான்காம் அலையின் பரவல் தீவிரமாக இருந்ததன் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏப்ரல் மாதம் முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கரோனா குறைந்த நிலையில் கட்டுப்பாடுகளை ஜப்பான் அரசு தளர்த்தியது. ஆனால் தலைநகர் டோக்கியோவில் மீண்டும் கரோனா அதிகரித்தது. இதன் காரணமாக அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கரோனா பரவலுக்கு இடையே அங்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அந்நாட்டில் அமெரிக்காவின் பைசர், மாடர்னா, இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனெகா ஆகிய மருந்துகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றை பொதுமக்களுக்கு போடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தநிலையில் மாடர்னா கரோனா தடுப்பூசி மருந்து பாட்டிலுக்குள் கருப்பு துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது உலோகத்தின் துகள் போன்று உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து சுமார் 10 லட்சம் தடுப்பூசி மருந்தை ஜப்பான் அரசு நிறுத்தி வைத்து உள்ளது. மாடர்னா தடுப்பூசி போட்ட யாருக்கும் இதுவரை எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. இந்த கருப்பு துகள்கள் எப்படி வந்தன என விசாரணை தொடங்கியுள்ளது. இந்த மருந்து அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டாலும் மருந்து பாட்டில்கள் ஸ்பெயினில் தயாரிக்கப்படுகின்றன. எனவே எங்கு தவறு நடந்தது என்பது விசாரணைக்கு பிறகே தெரிய வரும்.