பஞ்ச்ஷிர் மாகாணத்தில் கொல்லப்பட்ட தலிபான்கள்

பஞ்ச்ஷிர் மாகாணத்தில் கொல்லப்பட்ட தலிபான்கள்
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷிர் மாகாணத்தில் பதுங்கி இருந்த 13 தலிபான்கள் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து உள்ளூர் ஊடகங்கள் தரப்பில், ”தலிபான்களின் எதிர்ப்பு மாகாணமான பஞ்ச்ஷிரில் பதுங்கியிருந்த 13 தலிபான்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் இருப்பிடமும் தாக்கி அழிக்கப்பட்டன. பஞ்ச்ஷிர் தேசியவாதிகளே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்” என்று செய்தி வெளியாகியுள்ளது.

தலிபான்கள் கொல்லப்பட்டது குறித்து, ஆப்கன் செயல் தலைவர் அம்ருல்லா சலே கூறும்போது, “ அடக்குமுறை, பழிவாங்குதல், இருண்ட சிந்தனை ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் அனைத்து ஆப்கானிஸ்தான் மக்களுக்கும் இது ஒரு நம்பிக்கையாகும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆப்கன் தலைநகர் காபூலைத் தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் தலிபான்களுக்கு எதிரான போரைத் தலிபான் எதிர்ப்பு முக்கியத் தலைவரான பஞ்ச்ஷிர் மாகாணத்தைச் சேர்ந்த அகமத் மசூத் அறிவித்துள்ளார்.

ஆப்கனின் முக்கிய மலைப் பிரதேசமான பஞ்ச்ஷிர் மாகாணத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர் அகமத் மசூத். இவர் மறைந்த ஆப்கன் தலைவர் அகமத் ஷா மசூதின் மகன் ஆவார்.

1980களில் ஆப்கனில் நிலவிய சோவியத் எதிர்ப்புப் போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தவர் அகமத் ஷா மசூத். இவர் ஆப்கனின் தேசியத் தலைவராகக் கருதப்படுகிறார்.

பின்னணி

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனர்.

ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in