Published : 01 Sep 2021 05:32 PM
Last Updated : 01 Sep 2021 05:32 PM

அடுத்த அச்சுறுத்தல்; புதிய வகை உருமாற்ற கரோனா வைரஸ் ‘மியு’: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

பல்வேறு உருமாற்றங்களை எடுத்து உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ், அடுத்ததாக மியு (MU) B.1.621 என்ற உருமாற்றத்தை எடுத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

மிகவும் ஆபத்தான இந்த எம்யு வகை கரோனா வைரஸ் வளர்ச்சி, பாதிப்பு, பரவல் ஆகியவை குறித்துக் கண்காணித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் உருவான கரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஆல்ஃபா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று பல்வேறு வகைகளில் உருமாறி உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தி வருகிறது. இதில் டெல்டா பிளஸ் வகை கரோனா வைரஸ்தான் அதிவேகப் பரவல் கொண்டதாகவும், அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்துவதாகவும் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும் கரோனா வைரஸுக்கு எதிராகத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பல்வேறு நாடுகளிலும் மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் தடுப்பூசி செலுத்தியவர்களும் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், தொற்றால் பாதிக்கப்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது ஆறுதல் அளிக்கிறது.

ஆனால், முதல் முறையாக கொலம்பியாவில் கண்டறியப்பட்ட மியு வகை உருமாற்ற கரோனா வைரஸ், தடுப்பூசி மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியையே எதிர்க்கும் வல்லமை கொண்டதாக இருப்பதாகத் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அந்த வைரஸ் குறித்து அடுத்தடுத்த ஆய்வுகள் செய்யப்பட வேண்டும், அப்போதுதான் அதன் உண்மை நிலவரம் தெரியும் எனத் தெரிவித்துள்ளது.

கொலம்பியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட மியு வகை உருமாற்ற வைரஸ், தற்போது தென் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் கண்டறியப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய வகை உருமாற்ற கரோனா வைரஸ் பரவுவதால் நோய் தொற்றும் உலக அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் தடுப்பூசி செலுத்தாதவர்களிடையே டெல்டா வகை வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

சார்ஸ்-கோவிட்-19 வகை வைரஸ் ஏராளமான உருமாற்றம் அடைந்தாலும் அதில் பெரும்பாலும் சிறிய அளவில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தின. ஆனால், சில உருமாற்றங்கள் மட்டுமே அதிவேகமாகப் பரவுதல், நோயின் தீவிரத்தை அதிகப்படுத்துதல், தடுப்பூசியை எதிர்த்தல், நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்துதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

உலக சுகாதார அமைப்பு கண்டறிந்த வகையில் 193 நாடுகளில் ஆல்ஃபா வகை வைரஸ்களும், 170 நாடுகளில் டெல்டா வகை வைரஸ்களும், மியு உள்ளிட்ட 5 வகை உருமாற்ற வைரஸ்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x