Published : 01 Sep 2021 08:03 AM
Last Updated : 01 Sep 2021 08:03 AM

இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்ற தலிபான் தலைவர்; கத்தாரில் இந்தியத் தூதருடன் பேச்சில் பங்கேற்றார்

தலிபான் தலைவர் ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் : படம் உதவி ட்விட்டர்

புதுடெல்லி


கத்தாரில் இந்தியத் தூரர் தீபக் மிட்டலைச் சந்தித்து நேற்று பேச்சுவார்த்தையில் பங்ேகற்ற தலிபான் தீவிரவாத அமைப்பின் பிரதிநிதி ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் இந்திய ராணுவ அகாடெமியில் பயிற்சி பெற்றவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரி்க்க, நேட்டோ படைகள் முழுமையாக வெளியேறயதையடுத்து, அங்கு தலிபான் தீவிரவாத அமைப்பினர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். இன்னும் தலிபான்கள் தரப்பில் எந்தவிதமான அதிகாரபூர்வ ஆட்சியும் அமைக்கப்படவில்லை.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் சிறுபான்மையினர், இந்தியர்கள் நலன், ஆப்கானிஸ்தான் மண்ணை இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்தக்கூடாது உள்ளி்ட்ட பிரச்சினைகளுக்காக தலிபான் பிரதிநிதியுடன் இந்திய அ ரசு சார்பில் பேச்சுவார்த்தை நேற்று நடத்தப்பட்டது.

கத்தார் நாட்டில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் தலிபான் தீவிரவாத அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய், இந்தியத் தூதர் தீபக் மிட்டலைச் சந்தித்துப் பேசினார்.
முதல்முறையாக தலிபான் தீவிரவாத அமைப்புடன் ராஜாங்கரீதியான முறையான சந்திப்பை மத்திய அரசு நடத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஆப்கானிஸ்தான் மண்ணை இந்தியாவுக்கு எதிரான சதி வேலைகளுக்காக பயங்கரவாதிகள் பயன்படுத்தக்கூடிய ஆபத்து பற்றி தலிபான் தலைவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. ஆப்கனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவது குறித்தும், ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுபான்மையின மக்களுக்கு இந்தியா அடைக்கலம் அளிப்பது குறித்தும் பேசப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தலிபான் தீவிரவாத அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் இந்திய ராணுவ அகாடெமியில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலிபான் தீவிரவாத அமைப்பில் சேர்வதற்கு முன் ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். அப்போது கடந்த 1979 முதல் 1982ம் ஆண்டுவரை டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் சேர்ந்து ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் பயிற்சி பெற்றுள்ளார். மேலும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள நவ்கான் ராணுவ கல்லூரியிலும் ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் பயிற்சி எடுத்துள்ளார்.

தலிபான் தீவிரவாத இயக்கத்தில் அதிகம் படித்தவரான ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் அரசியல் அறிவியலில் முதுகலைப்பட்டம் பெற்றவர், சரளமாக ஆங்கிலத்தில் உரையாடக்கூடியவர். இந்தியா சார்பில் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளி்க்கப்பட்டது. அப்போது ஆப்கான் ராணுவத்தில் இருந்த முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் இந்திய ராணுவத்தால் பயிற்சி அளிக்கப்பட்டார்.

இந்திய ராணுவ அகாடெமியில் முகமது அப்பாஸ் பயிற்சி பெற்றபோது அனைவராலும் ஷெர் என்று அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான், சோவியத்யூனியன் போரிலும் பங்கேற்ற முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய், ராணுவத்திலிருந்து வெளியேறி தலிபான் தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளார்.

சோவியத்-ஆப்கன் போர் முடிந்தபின் கடந்த 1996-ம் ஆண்டு தலிபான்கள் ஆப்கனில் ஆட்சிக்கு வந்தபின், அதில் வெளியுறவுத்துறை இணைஅமைச்சராக முகமது அப்பாஸ் செயல்பட்டார். கத்தாரில் தலிபான் தீவிரவாத அமைப்பினர் அரசியல் பிரிவு அலுவலகம் திறந்தபின் கடந்த 20 ஆண்டுகளாக அதில் அரசியல் பிரிவு அதிகாரியாக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார்.

கடந்த 1996-ம் ஆண்டு வாஷிங்டன் சென்ற முகமது அப்பாஸ் அப்போது அதிபராக இருந்த பில் கிளின்டனைச் சந்தித்து தலிபான்கள் ஆட்சியை அங்கீகரிக்கக் கோரி பேசினார். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இருப்பினும் பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தலிபான் அரசியல் குழுவுக்கு முகமது அப்பாஸ் தலைமை ஏற்று சென்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x