

டர்பன் அணிந்திருந்ததால் விமா னத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் மெக்சிகோ விமான நிறுவனம் சீக்கிய நடிகரிடம் மன்னிப்பு கோரியது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மேன்ஹேட்டன் பகுதியைச் சேர்ந்தவர் வாரிஸ் அலுவாலியா (41). சீக்கியரான இவர் நடிகராகவும் பேஷன் டிசைனராகவும் பணியாற்றி வருகிறார்.
கடந்த 7-ம் தேதி மெக்ஸிகோ சிட்டியில் இருந்து நியூயார்க் செல்வதற்காக அலுவாலியா விமான டிக்கெட் முன்பதிவு செய் தார். இதற்காக அவர் மெக்ஸிகோ சிட்டி விமான நிலையத்துக்கு சென்றபோது பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவர் அணிந்திருந்த டர்பனை கழற்ற உத்தரவிட்டனர். அதற்கு அலுவாலியா மறுத்ததால் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
இதுகுறித்து அவர் கூறும்போது, “எனது மத நம்பிக்கையின்படி நான் டர்பன் அணிந்துள்ளேன். இதை அமெரிக்க அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்க தொலைக்காட்சி சீரியல்கள் பலவற்றில் நடித்துள்ளேன். ஆடை, நகை வடிவமைப்புக்காக பல்வேறு விருதுகளை வென்றுள்ளேன். இருந்த போதிலும் அதிகாரிகள் என்னை நம்ப மறுத்தது வேதனையளிக்கிறது” என்றார்.
இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கவாழ் சீக்கியர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மெக்சிகோவின் ஏரோமெக்சிகோ விமான நிறுவனம் மன்னிப்பு கோரி உள்ளது. இதை ஏற்றுக் கொண்ட அலுவாலியா, அந்த நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மேலும் மதம் மற்றும் கலாச்சார நம்பிக்கையை பாதிக்காத வகை யில் பயணிகளை எவ்வாறு சோத னைக்கு உட்படுத்த வேண்டும் என்பது குறித்து ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் உறுதி அளித்துள்ளதாக சீக்கிய கூட்ட மைப்பு தெரிவித்துள்ளது.