காபூல் விமான நிலையத்தில் 73 விமானங்களை செயலிழக்கச் செய்துவிட்டு கிளம்பிய அமெரிக்கப் படைகள்

காபூல் விமான நிலையத்தில் 73 விமானங்களை செயலிழக்கச் செய்துவிட்டு கிளம்பிய அமெரிக்கப் படைகள்
Updated on
1 min read

காபூல் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தங்களுக்குச் சொந்தமான விமானங்கள், ஆயுதம் தாங்கிய வாகனங்கள், ஏவுகணை அழிப்பு அமைப்புகள் என மொத்தம் 73 வாகனங்களை அமெரிக்கப் படைகள் இனி பயன்படுத்தவே முடியாதபடி செயலிழக்கச் செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் கடந்த 15 ஆம் தேதி தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதன் பின்னர், காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில் அதிபர் பைடன் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறும் எனக் கூறியிருந்தார்.

அதன்படி ஆகஸ்ட் 31 ஆம் தேதியான இன்று அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறிவிட்டன.

வெளியேறுவதற்கு முன்னதாக, காபூல் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தங்களுக்குச் சொந்தமான விமானங்கள், ஆயுதம் தாங்கிய வாகனங்கள், ஏவுகணை அழிப்பு அமைப்புகள் என மொத்தம் 73 வாகனங்களை அமெரிக்கப் படைகள் இனி பயன்படுத்தவே முடியாதபடி செயலிழக்கச் செய்துள்ளது.

ஜெனரல் கென்னத் மெக்கன்சி

இது குறித்து அமெரிக்க மத்திய படைகளின் தலைவர் ஜெனரல் கென்னத் மெக்கன்சி கூறுகையில், "ஹமீது கர்சாய் விமான நிலையத்தில் விமானங்கள், போர் வாகனங்கள் உட்பட 73 வாகனங்களை செயலிழக்கச் செய்துள்ளோம். அந்த விமானங்கள் இனி பறக்கவே செய்யாது. அதேபோல் அங்குள்ள போர் தளவாடங்களை வேறு எவராலும் இனி பயன்படுத்தவே முடியாது.

ஒவ்வொரு வாகனத்தின் மதிப்பும் 1 மில்லியன் டாலர். இவற்றில் 27 ஹம்வீ (Humvee) ஏவுகணை இடைமறிப்பு வாகங்களும் அடங்கும்.

அதுமட்டுமல்லாமல் C-RAM system எனப்படும் ராக்கெட்டுகள், பீரங்கிக் குண்டுகளை இடைமறிக்கும் சக்தி கொண்ட வாகனத்தையும் அங்கேயே விட்டுவந்துள்ளது. ஆனால், சிரேம் சிஸ்டம் செயலிழக்கச் செய்யப்பட்டுவிட்டது. நாங்கள் வெளியேறும் கடைசி நிமிடம் வரை அந்த அமைப்பை இயங்கும் நிலையில் வைத்திருந்தோம்" என்றார்.

இந்த வாகனத்தைக் கொண்டுதான் அமெரிக்க ஐஎஸ்ஐஎஸ் கோரோசன் பயங்கரவாதிகள் அனுப்பிய ராக்கெட்டை அழித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in