Last Updated : 31 Aug, 2021 04:16 PM

 

Published : 31 Aug 2021 04:16 PM
Last Updated : 31 Aug 2021 04:16 PM

ஆழ்ந்த தொடர்பில் ஐஎஸ் கோராசான்-தலிபான்: வேறுபட்டாலும் பொது எதிரி அமெரிக்காதான்

பிரதிநிதித்துவப் படம்.

கேன்பெரேரா

ஐஎஸ் கோராசான், தலிபான் தீவிரவாதிகள் இரு தரப்புக்கும் இடையே வேறுபாடுகள் இருந்தாலும் இருவருக்கும் இடையே ஆழமான தொடர்பு இருக்கிறது. இரு தரப்புக்கும் பொது எதிரி அமெரிக்காதான்.

வன்முறை, ஆயுதக் கிளர்ச்சி, உயிர் பலி, ஷரியத் சட்டம் அடிப்படையிலான அரசு அமைவதையே தலிபான்களும், ஐஎஸ் கோராசான் தீவிரவாத அமைப்பும் லட்சியமாகக் கொண்டுள்ளன. கொள்கையளவில் இரு தீவிரவாத அமைப்புகளும் ஒரே மாதிரியாக இருந்தாலும், களத்தில் இருவரும் எதிரிகளாகவே இருக்கிறார்கள்.

ஐஎஸ் கோராசான் தீவிரவாதிகளை ஆப்கானிஸ்தானில் காலூன்ற தலிபான்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள். அதேசமயம், இருவருக்கும் இடையிலான பொது எதிரியை ஐஎஸ் கோராசான் தீவிரவாதிகள் கொல்லும்போது மட்டும் தலிபான்கள் மவுனம் காக்கிறார்கள்.

1980-ம் ஆண்டு சோவியத் யூனியனை எதிர்த்துப் போரிட்ட மாணவர்கள் அமைப்பை ஒன்றுதிரட்டி முல்லா முகமது ஓமர் தலிபான் தீவிரவாத அமைப்பை ஏற்படுத்தினார். தொடக்கத்தில் ஹெராத் மாகாணத்தை 1996-ம் ஆண்டு கைப்பற்றி, பின்னர் படிப்படியாக ஆப்கானிஸ்தானைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் பரவி இருந்த ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தங்களின் லட்சியமான இஸ்லாமிய அரசை உருவாக்க ஆப்கானிஸ்தானில் கடந்த 2015-ம் ஆண்டு கால்பதித்தது. அதுமுதலே தலிபான்களுக்கும், ஐஎஸ் அமைப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

தலிபான் அமைப்பிலிருந்து விலகியவர்கள், ஐஎஸ் ஆதரவாளர்கள் பலரை இணைத்து ஐஎஸ் கோராசான் தீவிரவாத அமைப்பை ஹபீஸ் சயத் கான் என்பவர் உருவாக்கினார். இவர் பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர்.

ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஹக்கானி நெட்வொர்க் ஆகியவை ஐஎஸ் கோராசான் அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவை. தலிபான்கள், ஐஎஸ் கோராசான் இடையே களத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவதில் மோதல் நிலவினாலும் பொது எதிரி என்ற வட்டத்துக்குள் இருவரும் கைகோத்து அமெரிக்காவை எதிர்க்கிறார்கள்.

கடந்த 26-ம் தேதி காபூல் நகரில் விமான நிலையத்துக்கு வெளியே நடந்த கொலைவெறி மனித வெடிகுண்டு தாக்குதல்கூட ஐஎஸ் கோராசான் அமைப்பினர் நடத்தியதுதான். ஆனால், இந்தத் தாக்குதலுக்குப் பெரிதாக தலிபான்கள் கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை.

தீவிரவாதம் குறித்து ஆய்வு செய்தும் சஜன் கோயல் கூறுகையில், “ஐஎஸ் கோராசான் அமைப்பைத் தங்களின் தாக்குதல் முயற்சிக்கு தலிபான்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அப்பாவி ஆப்கன் மக்கள்தான் பலியாகிறார்கள். தலிபான்கள், ஐஎஸ் கோராசான் அமைப்பினர் இடையே இருக்கும் வேறுபாடுகளை விடப் பல்வேறு விஷயங்களில் ஒருமித்துச் செயல்படுகிறார்கள். இதில் அதிகமாக பாதிக்கப்படுவது ஆப்கானிஸ்தான் மக்கள்தான். இரு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே ஆழ்ந்த தொடர்பு இருக்கிறது. இரு தரப்பினரும் ஒரேமாதிரியான நெட்வொர்க்கைப் பகிர்ந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியப் பத்திரிகையாளர் ஸ்டான் கிரான்ட் கூறுகையில், “தலிபான், ஐஎஸ் கோராசான் இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக்கொண்டாலும், பொது எதிரிக்கு எதிராக ஒருமித்துச் செயல்படுகிறார்கள். அந்தப் பொது எதிரி அமெரிக்காதான்.

ஆப்கன்-பாகிஸ்தான் எல்லையில் செயல்படும் ஐஎஸ் கோராசான் ஹக்கானி நெட்வொர்க் உதவியுடன் இயங்குகிறது. ஹக்கானி நெட்வொர்க்கின் தலைவர் சிராஜுதீன் ஹக்கானி. தலிபான் இயக்கத்தில் மூத்த தலைவராக இருந்தவர். ஆதலால், தலிபான், ஐஎஸ் கோராசான் இடையே வேறுபாடு இருந்தாலும், ஆழ்ந்த தொடர்பு உடையவை, நெருக்கமானவை, பொது எதிரி அமெரிக்காவுக்காகப் போராடுவை” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x